நீக்கப்பட்ட பயிற்சியாளரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்
சத்துவாச்சாரி அரசு பளுதூக்கும் பயிற்சி மையத்தில் இருந்து நீக்கப்பட்ட பயிற்சியாளர் கவிதாவை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் வீராங்கனைகள் மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர்வு கூட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலஅலுவலர் ராமச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சீதா, சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தனஞ்செயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 322 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.
பளுதூக்கும் பயிற்சியாளர்
கூட்டத்தில் வேலூர் காந்திரோடு பகுதியை சேர்ந்த நரசிம்மன் அளித்த மனுவில், வேலூர் காந்திரோட்டின் அருகே மாநகராட்சிக்கு சொந்தமாக காலியிடம் உள்ளது. அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து கடை கட்டி வாடகைக்கு விடுவதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். எனவே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்யாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அரசு பளுதூக்கும் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் வீராங்கனைகள் அளித்த மனுவில், நாங்கள் பளுதூக்கும் பயிற்சி மையத்தில் பயிற்சியாளர் கவிதாவிடம் கடந்த சில ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறோம். இந்த நிலையில் அவர் கடந்த 10-ந் தேதி முதல் பயிற்சி மையத்துக்கு வரவில்லை. இதுகுறித்து காரணம் கேட்டதற்கு அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் அளித்த சிறப்பான பயிற்சி காரணமாக பல வீராங்கனைகள் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பல்வேறு பதக்கம் வென்றுள்ளனர். பல தேசிய அளவிலான பளுதூக்கும் வீராங்கனைகளை பயிற்சியாளர் கவிதா உருவாக்கி உள்ளார்.
கேலோ இந்தியா, முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளன. ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று எங்களுக்கு கனவுகள் உள்ளன. அதற்கு எங்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்த பயிற்சியாளர் கவிதாவை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பணி நியமன ஆணை
கூட்டத்தில் இந்திய ராணுவத்தில் அவில்தாராக பணிபுரிந்தபோது உயிரிழந்த எஸ்.சத்தியமூர்த்தியின் மகன் சோமசுந்தரத்துக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்களையும் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வழங்கினார்.
முன்னதாக மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.