மாவட்ட ஆஸ்பத்திரியை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது


மாவட்ட ஆஸ்பத்திரியை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் இருந்து மாவட்ட ஆஸ்பத்திரியை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நாகப்பட்டினம்


நாகையில் இருந்து மாவட்ட ஆஸ்பத்திரியை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்து பிரித்து, 1991-ம் ஆண்டில் புதிய மாவட்டமாக நாகை உருவாக்கப்பட்டது. அதிகளவில் இயற்கை சீற்றத்துக்கு உள்ளாகும் நாகை மாவட்டத்தில் உயர் சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு தஞ்சாவூர் அல்லது புதுச்சேரி, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

இதனை கருத்தில் கொண்டு, நாகை மாவட்ட மக்கள் உயர் சிகிச்சை பெறும் வகையில், நாகை அருகே ஒரத்தூரில் ஆஸ்பத்திரியுடன் கூடிய மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டது. இதில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் ஆஸ்பத்திரியின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், நாகையில் உள்ள மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது.

வேறு இடத்துக்கு மாற்றம்

இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உள் நோயாளியாகவும், வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால், ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் நாகை மாவட்ட ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

ஒரத்தூரில் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் பணிகள் ஒவ்வொன்றாக நிறைவடைந்து வருவதால் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட உள்ளது. இந்த நிலையில் நாகையில் உள்ள மாவட்ட ஆஸ்பத்திரி, வேதாரண்யத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்டது. மாவட்ட ஆஸ்பத்திரிக்கான கட்டுமான பணிகள் வேதாரண்யத்தில் நடைபெற்று வருகிறது.

கலெக்டர் அலுவலகத்தில் மனு

மாவட்ட ஆஸ்பத்திரி வேதாரண்யத்துக்கு சென்றால் நாகை நகரில் அரசு ஆஸ்பத்திரி இல்லாத நிலை ஏற்படும். இதனால் சிகிச்சைக்காக 8 கிலோ மீட்டர் தூரம் ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். எனவே மாவட்ட ஆஸ்பத்திரியை வேதாரண்யத்துக்கு மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

நாகை நகரில் மாவட்ட ஆஸ்பத்திரி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த கோரிக்கை தொடர்பாக நேற்று நாகை இந்திய வர்த்தக தொழில் குழுமத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.


Next Story