குப்பை கிடங்கு அமைப்பதற்கான இடத்தை மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு
பேரணாம்பட்டு நகராட்சி குப்பை கிடங்கு அமைப்பதற்கான இடத்தை மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு செய்தார்.
பேரணாம்பட்டு நகராட்சிக்கு குப்பை கிடங்கு இல்லாததால் பல்லலகுப்பம் கிராமம் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நகராட்சி நிர்வாகம் கடந்த 5 மாதங்களாக குப்பைகளை கொட்ட முடியாமல் திணறி வந்தது. இரவு நேரங்களில் பாழடைந்த கிணறுகள், ஒதுக்குப் புறமான பகுதிகளில் கொட்டி வந்தனர். இதனால் நகரின் பல இடங்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டு வந்தன. குப்பை கிடங்கு இல்லாதது குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அவருடைய உத்தரவின்பேரில் பேரணாம்பட்டு டவுன் எருக்கம்பட்டு கூட்ரோடு மலையடிவார பகுதியில் உள்ள இடத்தில் குப்பை கிடங்கு அமைப்பதற்கான இடத்தை வருவாய் துறையினர் பரிந்துரை செய்ததையடுத்து நேற்று வேலூர் மாவட்ட வருவாய் அதிகாரி ராமமூர்த்தி நகராட்சி குப்பை கிடங்கு அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். தாசில்தார் நெடுமாறன், மண்டல துணை தாசில்தார் வடிவேல், நகராட்சி ஆணையாளர் சுபாஷினி, நகராட்சி துணைத் தலைவர் ஆலியார்ஜூ பேர் அஹம்மத், நகராட்சி கவுன்சிலர் அப்துல் ஜமீல், நகர தி.மு.க. நிர்வாகி அர்ஷத், வெற்றிவேல், லாசர், தாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.