தொந்தரவு செய்யும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்ய வேண்டும்
சொத்துக்காக தொந்தரவு செய்யும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் தந்தை புகார் மனு அளித்துள்ளார்.
சொத்துக்காக தொந்தரவு செய்யும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் தந்தை புகார் மனு அளித்துள்ளார்.
மக்கள் குறைதீர்வு கூட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகள் அமர்ந்துள்ள இடத்துக்கே சென்று அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
வேலூர் அருகே உள்ள இடையன்சாத்து கிராமத்தைச் சேர்ந்த பிச்சாண்டி (வயது 72) என்பவர் மனு அளித்தார். அந்த மனுவில் நான் ஓய்வு பெற்ற போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர். எனக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். எனது மகள் விஜயலட்சுமி காவல்துறையில் சிறப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். என்னையும், எனது மனைவியையும் மகன் தான் கவனித்து வருகிறார். மகள் விஜயலட்சுமி கவனிப்பது இல்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டால் ஆஸ்பத்திரிக்கு கூட அழைத்துச் செல்வதில்லை. ஆனால் எனது ஓய்வூதிய பணம் மற்றும் எனது பெயரில் உள்ள சொத்தை எழுதி தரும்படி கேட்டு தொந்தரவு செய்கிறார்.
தினந்தோறும் அவர் சொத்து கேட்டு துன்புறுத்துகிறார். அவர் குடும்பத்தில் பல பிரச்சினைகளை உருவாக்குகிறார். அவரை வேலூர் மாவட்டத்தில் இருந்து வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு மாற்றினால் நாங்கள் நிம்மதியாக இருப்போம். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
குடியாத்தம் அருகே உள்ள பரதராமி இந்திராநகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், பரதராமி இந்திரா நகரில் உள்ள இடத்தை மாடி வீடு உள்ளவர்களும், அரசு வேலை செய்பவர்களும் இலவச பட்டா வாங்கியதாக கூறுகின்றனர். பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை மீட்டு அங்கு அங்கன்வாடி மையம், விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மணல்கொள்ளை
இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் வேலூர் டவுன், சத்துவாச்சாரி, பழைய பஸ் நிலையம், காகிதப்பட்டறை, நேதாஜி மார்க்கெட் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரிகள் விற்பனை நடக்கிறது. கூலி தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் லாட்டரிகளை வாங்கி பணத்தை இழக்கின்றனர். இதனால் கூலி தொழிலாளர் வாழ்வாதாரம் கெடுகிறது. லாட்டரி விற்பனை சம்பந்தமாக நடவடிக்கை எடுத்து ஏழை குடும்பங்களை காப்பாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அளித்துள்ள மனுவில், பேரணாம்பட்டு ஒன்றியம் பத்தரப்பல்லி ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். குடியாத்தம் நகரத்தில் கவுண்டன்ய ஆற்றில் வெள்ளம் காரணமாக வீடுகள் அகற்றப்பட்ட 1,450 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கித்தர வேண்டும். காட்பாடி ஒன்றியம் பொன்னை பகுதியில் 20 ஆண்டுகளாக வீட்டுமனை கேட்டு போராடி வரும் 200 கட்டுமான தொழிலாளர் குடும்பங்களுக்கு வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்திருந்தனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி முறையில் பணியாற்றி வரும் தனி அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள் அளித்துள்ள மனுவில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாங்கள் தனி அலுவலர்களாகவும், தொடர்பு அலுவலர்களாகவும் பணியாற்றி வருகிறோம். தற்போது எங்களை உதவி பிரிவு அலுவலர்களாக பணிஅமர்த்த முடிவு செய்துள்ளனர். ஊதியத்தையும் குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் எங்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும். பதவி இறக்கம், ஊதியம் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கூறி உள்ளனர்.
குடியாத்தம் மேல்முட்டுக்கூர் ஊராட்சி காக்காதோப்பு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், நாங்கள் எங்கள் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். 30 குடும்பங்களுக்கு 1988-ம் ஆண்டு வீட்டுமனை ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில் எங்களது மனைகளை தனித்தனியே அளவீடு செய்து பட்டா வழங்க வேண்டும் என்று அதில் கூறிஉள்ளனர்.