தொலைநோக்கு பார்வையோடு பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்துகிறது- ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.


தொலைநோக்கு பார்வையோடு பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்துகிறது- ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
x

தொலைநோக்கு பார்வையோடு பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது என்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறினார்.

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடி இமாம் இப்னு தைமிய்யா இஸ்லாமிய கல்லூரி பட்டமளிப்பு விழா சக்கரை தேக்கு தோப்பு திடலில் நடைபெற்றது. இதில் த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 8 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சி நாட்டில் பல்வேறு சீர்கேடுகளை ஏற்படுத்தி உள்ளது. குடிமக்கள் மற்றும் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. பா.ஜனதா தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை. அரசுடைமை நிறுவனங்களை எல்லாம் தனியாருக்கு தாரைவார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தி.மு.க.வின் ஓராண்டு கால ஆட்சி அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தொலைநோக்கு பார்வையோடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசுக்கு தலை சாய்த்து விடாமல் மாநிலங்களின் உரிமைகளை பாதுகாத்து வருகிறது. பேரறிவாளன் விடுதலை போன்றே நீண்ட நாள் சிறையில் வாடும் அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்ய முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்து உள்ளோம். புளியங்குடியை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்க வேண்டும். புளியங்குடியில் காய்கறி மார்க்கெட் விரைவில் கட்டி முடிக்கப்பட வேண்டும். புளியங்குடி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story