பாம்பை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்த நாய்
கடலூரில் பாம்பை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்த நாயால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் வெளிச்செம்மண்டலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வரும் இவர், தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவரது வீட்டு வளாகத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த அவரது நாய் அந்த பாம்பை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்து நீண்ட நேரமாக குரைத்துக் கொண்டே இருந்தது. இதனால் பாம்பும் அங்கிருந்து நகர முடியாமல் நாயை நோக்கி சீரியபடியே இருந்தது. இதற்கிடையே நீண்ட நேரமாக நாய் குரைத்துக் கொண்டிருந்த சத்தம் கேட்டு செந்தில்குமாரின் குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது அங்கு பாம்பின் அருகில் நாய் குரைத்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் அவர் அங்கிருந்த பாம்பை லாவகமாக பிடித்தார். பிடிபட்டது சுமார் 5 அடி நீளமுடைய நல்லபாம்பு என்பது தெரிய வந்தது. பின்னர் அந்த பாம்பை காப்புக் காட்டில் விட கொண்டு சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.