விவசாயி வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு
கயத்தாறு அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே நேற்று முன்தினம் பட்டப்பகலில் விவசாயியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவிலிருந்த ரூ.2 லட்சம் பணத்தை திருடி சென்றனர்.
விவசாயி
கயத்தாறு அருகே உள்ள உசிலாங்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் உச்சிமாகாளி. இவரது மகன் உபேந்திரன் (வயது 35). விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூரிலுள்ள உறவினர் வீட்டுக்கு ெசன்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து மாலையில் வீட்டுக்கு அவர் குடும்பத்தினருடன் திரும்பி வந்துள்ளார். வீட்டின் முன்பக்க கதவை திறந்து கொண்டு அவர்கள் உள்ளே சென்றுள்ளனர்.
ரூ.2லட்சம் திருட்டு
அப்போது வீட்டிற்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. அதிலிருந்த ரூ.2 லட்சம் பணம் திருடப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்துள்ளார். அப்போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது.
இவர், குடும்பத்தினருடன் காலையில் வெளியூர் செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள் மதியம் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே பகுந்துள்ளனர். பீரோவுக்கு அருகில் தொங்க விடப்பட்டு இருந்த சாவி மூலம், அதை திறந்து பணத்தை திருடி சென்றது தெரிய வந்துள்ளது.
போலீசார் விசாரணை
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டனி திலீப் ஆகியோர் சம்பவ வீட்டுக்கு ெசன்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். அறிவியல் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் ரேகைகளை பதிவு செய்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மேலும், இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்துவீடுபுகுந்து ரூ.2 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
பட்டப்பகலில் விவசாயி வீடுபுகுந்து பணம் திருடப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.