விழுப்புரம் அருகேவீட்டின் கதவை உடைத்து ரூ.5 லட்சம் நகை கொள்ளை
விழுப்புரம் அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.5 லட்சம் நகையை மா்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனா்.
விழுப்புரம் அருகே உள்ள ராமையன்பாளையத்தை சேர்ந்தவர் வைத்தியலிங்கம். இவர் கடந்த 10 ஆண்டுகளாக துபாயில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். இவர் பனங்குப்பம் பகுதியில் புதியதாக வீடு கட்டினார். அந்த வீட்டில் தற்போது வைத்தியலிங்கத்தின் மனைவி நதியா (வயது 30) தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் நதியா, தனது வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகளுடன், கோவில் திருவிழாவுக்காக ராமையன்பாளையத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம மனிதர்கள், நதியாவின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 11½ பவுன் நகைகள் மற்றும் ¼ கிலோ வெள்ளி கொலுசுகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, நதியா வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.