வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் கொள்ளை
குலசேகரன்பட்டினத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை- பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் அருகே உள்ள தீர்த்தபுரம் மேலத்தெருவை சேர்ந்த தியாகராஜ் என்பவருடைய மனைவி தவசி கனி (65). தியாகராஜ் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தவசி கனி தனியாக வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். தவசி கனிக்கு சொந்தமாக ஊரில் தோட்டம் உள்ளது. தோட்டத்தை கவனித்து விட்டு வீட்டில் தனியாக இருந்து வருவது வழக்கம்.
கடந்த 22-ந் தேதி மதியம் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 3 பவன் நகை மற்றும் 12 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் மர்மநபர்களை தேடி வருகிறார்.