வரைவு பட்டியலை கலெக்டர் கார்மேகம் வெளியிட்டார்


வரைவு பட்டியலை கலெக்டர் கார்மேகம் வெளியிட்டார்
x
தினத்தந்தி 10 Nov 2022 1:00 AM IST (Updated: 10 Nov 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 29 லட்சத்து 74 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 29 லட்சத்து 74 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டார். அதனை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்.

மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 11 தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் 14 லட்சத்து 79 ஆயிரத்து 231 ஆண் வாக்காளர்களும், 14 லட்சத்து 94 ஆயிரத்து 771 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 248 பேரும் என மொத்தம் 29 லட்சத்து 74 ஆயிரத்து 250 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கலெக்டர் பேட்டி

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கார்மேகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப்பதிவு மையங்கள், தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும், www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் மற்றும் www.elections.tn.gov.in என்ற முகவரியிலும் Voter helpline app என்ற கைப்பேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம்-6, பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம்-7, குடியிருப்பை மாற்றியதற்கும், நடப்பு வாக்காளர் பட்டியலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கும், மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிப்பதற்கும் படிவம்-8 ஐ பயன்படுத்த வேண்டும்.

சிறப்பு முகாம்கள்

மேலும் இந்த சிறப்பு சுருக்க முறைத்திருத்தத்தில் 17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் அதாவது 1.4.2023, 1.7.2023 மற்றும் 1.10.2023 ஆகிய காலாண்டு தேதிகளில் தகுதி நாளாக கொண்டு 18 வயதை பூர்த்தி அடையும் நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம்-6ன் மூலம் விண்ணப்பிக்கலாம். இவர்களின் மனுக்கள் அந்தந்த காலாண்டில் பரிசீலித்து முடிவு செய்யப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர், 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் 17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் விண்ணப்பிக்க வசதியாக வருகிற 12, 13, 26 மற்றும் 27-ந் தேதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும். அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந் தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 5.1.2023 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஊர்வலம்

இதைத்தொடர்ந்து தேர்தலில் பங்கேற்பதற்கான இலக்கை நோக்கி என்னும் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கார்மேகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) வாகா சங்கத் பல்வந்த், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சேலம் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சரவணன் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

-----

(கஜேந்திரன் செட் ெசய்த, வாக்காளர் பட்டியல் பாக்ஸ் மேட்டர் இன்டிசைனில் உள்ளதை சேர்த்து வைக்கவும்)


Next Story