'கல்வி கண்ணை திறப்பதையே பெரும்பணியாக கொண்டு திராவிட மாடல் அரசு செயல்படுகிறது' முதல்-அமைச்சர் பேச்சு


கல்வி கண்ணை திறப்பதையே பெரும்பணியாக கொண்டு திராவிட மாடல் அரசு செயல்படுகிறது முதல்-அமைச்சர் பேச்சு
x

கல்வி கண்ணை திறப்பதையே பெரும்பணியாக கொண்டு திராவிட மாடல் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

இந்தபட்டத்தோடு உங்கள் படிப்பு முடிந்துவிட போவது இல்லை. அந்த பட்டத்தை நோக்கி உயருங்கள். பட்டங்கள் என்பது வேலைவாய்ப்புக்காக மட்டும் அல்ல. உங்களுடைய அறிவாற்றலை மேம்படுத்துவதற்காக என்பதை மறந்துவிடக்கூடாது. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி முதன்மை விருந்தினராக வந்திருக்கிறார். இது உங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை. நான் பட்டம் வாங்கும் போது பிரதமரே வந்திருந்தார் என்று எதிர்கால பிள்ளை செல்லவங்களிடம் பெருமையாக சொல்லலாம்.

இத்தகைய பெருமைகளோடு எதிர்காலத்துக்குள் நீங்கள் நுழைகிறீர்கள். அறிவாற்றல்தான் அனைத்திலும் வலிமையானது. சாதி, மதம், பணம், அதிகாரம், வயது, அனுபவம், பதவி, நாடுகள், வளர்ச்சி ஆகிய அனைத்தின் தன்மையும் ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம், நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஆனால் அறிவு மட்டும்தான் அனைத்தையும் கடந்து ஒரே அளவுகோலோடு அளவிடப்படுகிறது. தமிழர்கள் எப்போதும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கக்கூடியவர்கள். கடல்வணிகம், கடற்படை, இரும்பு வார்க்கும் தொழில்நுட்பம், கல்லணை, தஞ்சை பெரியகோவில் என வரலாற்றில் நிலைத்திருக்ககூடிய பல படைப்புகளை தன் தொழில்நுட்ப அறிவால் எல்லோருக்கும் முன்னோடியாக தமிழன் படைத்திருக்கிறான்.

திராவிட மாடல் அரசு

கல்வி என்பது தான் யாராலும் திருட முடியாத, பறிக்க முடியாத சொத்து. அதனால்தான் படிப்பதற்கு மட்டும் எத்தகைய தடைக்கல்லும் இருக்ககூடாது என்று நினைக்கிறோம். இன்றைய திராவிட மாடல் தமிழ்நாடு அரசானது, கல்வி கண்ணை திறப்பதையே பெரும்பணியாக செய்து வருகிறது. திராவிட இயக்கத்தின் முழுமுதற்கொள்கையான சமூகநீதி அடிப்படை என்பதே கல்விதான். அனைவரும் படிக்கவேண்டும், அனைவரும் வேலைவாய்ப்பை பெறவேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே திராவிட இயக்கம் தோன்றியது. சமூகநீதி கருத்தியலும் தோன்றியது.

படிப்பு என்பதை பட்டத்தோடு மட்டும் சுருக்கிவிடாமல், வேலைவாய்ப்பு, வாழ்க்கைத்தரம், சமூகவளர்ச்சி ஆகிய படிநிலைகளிலும் உயர்த்தும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. படித்து முடித்து வெளியே வருபவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உடனுக்குடன் உருவாக்கி தரக்கூடிய சூழலை உருவாக்கி வருகிறோம். இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில்வைத்து தமிழ்நாட்டில் தொழில்தொடங்கக்கூடிய நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளோம். இதன்மூலம் ஏராளமான தொழில்நிறுவனங்கள் தமிழகம் நோக்கி வருகின்றன. அதனால்தான் தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில், 14-வது இடத்தில் இருந்து ஒரே ஆண்டில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது, தமிழ்நாடு.

நான் முதல்வன் திட்டம்

புதிய புதிய தொழில்களை ஈர்ப்பதற்காக தமிழக அரசு தன்னை வடிவமைத்து கொண்டுள்ளது. கடந்த ஓராண்டில் செமி-கண்டக்டர்கள், மின்வாகனங்கள், லித்தியம்- அயன் பேட்டரிகள், ஒருங்கிணைந்த சூரிய மின்அழுத்திகள் உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன், தரவு மையங்கள் போன்ற துறைகள் சார்ந்த திட்டங்கள், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்கு தேவையான அறிவுத்திறனை உருவாக்கவே 'நான் முதல்வன்' திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.

ஆண்டுதோறும் மாநிலம் முழுவதிலும் உள்ள சுமார் 10 லட்சம் இளைஞர்களை அறிவில், சிந்தனையில், படிப்பில் ஆற்றலில் திறமையில் திட்டமிட மேற்கொண்டிருக்கிறோம். அவர்கள் வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க செய்து அவர்களின் திறமைகளை அவர்களுக்கு உணர்த்தி, அதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவை நாம் பெற்றிடும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் 4-ம் தலைமுறை தொழில்வளர்ச்சி என்ற அடிப்படைக்கு ஏற்ப நம்முடைய இளைஞர்கள் தயாராக வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள். தொழிற்சாலைகளையும் தரம் உயர்த்த, தொழில் புத்தாக்க மையங்கள் உருவாக்கி வருகிறோம். நான் அடிக்கடி சொல்லிவருவதுபோல, 2026-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் 2 மில்லியன் இளைஞர்களின் திறன்மேம்பாடு அடையவேண்டும். அதில் நீங்களும் இடம்பெறவேண்டும்.

நல்லெண்ண தூதர்கள்

2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும். அதிலும் உங்கள் பங்கு இருக்கவேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கிய உலகத்தை உருவாக்க உங்களை ஒப்படைத்து கொள்ளுங்கள். அனைத்து வகையில் தகுதிப்படுத்தி கொள்ளுங்கள். உங்களின் வளர்ச்சிக்கு தடையாக எது இருந்தாலும், அதனை தகர்த்து முன்னேற்றம் காணுங்கள். உங்கள் கனவு மட்டுமல்லாது, பெற்றோரின் கனவுகள் நிறைவேற்றுங்கள். உங்களிடம் இருந்து இந்த மாநிலமும், இந்தியாவும் நிறைய எதிர்பார்க்கிறது.

தமிழ்நாட்டில் தலைசிறந்த தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்கிறீர்கள். அரசியல் அமைப்பு வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை நீங்கள் வளர்த்து கொள்ள வேண்டும். பழமைவாதத்தை புறந்தள்ளி புதிய கருத்துகளை ஏற்று, பகுத்தறிவு பாதையில் நடைபோட்டால்தான் நீங்கள் பெற்ற பட்டத்துக்கு பெருமை. இன்று முதல் நீங்கள் பட்டதாரிகள் மட்டுமல்ல. உலகெங்கும் வலம்வர போகக்கூடிய இந்தியாவின்-தமிழ்நாட்டின் நல்லெண்ண தூதுவர்கள். திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாட்டில் உயர்கல்வியின் பொற்காலத்தை உருவாக்க தொடர்ந்து அயராது உழைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

சாதிக்க வயது தடையில்லை: 70 வயதில் பிஎச்.டி. பட்டம் பெற்ற என்ஜினீயர்

சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 70 வயது என்ஜினீயர் ஆர்.ராஜகோபால் என்பவர் பிஎச்.டி. பட்டம் பெற்றார். 1980-ம் ஆண்டு வேதியியல் என்ஜினீயரிங் துறையில் எம்.டெக் பட்டம் பெற்ற இவர், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் பணியாற்றி 2013-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

எரிவாயு நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக அவர் பிஎச்.டி. பட்டம் பெற்றார்.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன பொது மேலாளர் ஜெபசெல்வின் கிளாட்சன், 'போக்குவரத்து' என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு நேற்று நடந்த விழாவில் பிஎச்.டி. பட்டம் பெற்றார். இதேபோன்று பல்வேறு பிரிவுகளில் ஆராய்ச்சி மேற்கொண்ட 1,813 பேர் பிஎச்.டி. பட்டம் பெற்றனர்.

மோடிக்கு திருவள்ளுவர் சிலையை நினைவு பரிசாக வழங்கிய மு.க.ஸ்டாலின்

* பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வெள்ளியிலான திருவள்ளூவர் சிலையை நினைவுப்பரிசாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் பொன்னாடை அணிவித்தார்.

* பிரதமர் நரேந்திர மோடி காலை 10.47 மணி முதல் காலை 10.55 மணி வரை 8 நிமிடங்கள் நின்றபடி பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த 69 பேருக்கு தங்கப்பதக்கம்- பட்டங்களை வழங்கி வாழ்த்தினார். சிலரது தலையில் கையை வைத்து ஆசீர்வதித்தார்.

* 'அனைவருக்கும் வணக்கம்' என்று தமிழில் கூறி பிரதமர் நரேந்திர மோடி பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

* சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் என்ற வகையில் அவரும் பட்டமளிப்பு விழா அங்கி அணிந்து, பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகிய சிறப்பு விருந்தினர்களை அழைத்து சென்ற குழுவில் இடம்பெற்று அணிவகுத்தார்.

* பட்டம் பெற வந்தவர்களில் பலர் அங்கிகளுடன் பல்வேறு அரங்குகளில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அங்கு அகன்ற திரையில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. விழா முடிவடைந்ததும் பட்டம் பெற வந்தவர்கள் அமர வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்த மாணவர்கள் மத்தியில் இரு கைகளையும் உயர்த்தியபடி அனைவருக்கும் வாழ்த்துகள் என கூறினார். அதற்கு மாணவர்களும் 'மிக்க நன்றி சார்' என ஒருமித்த குரலில் பதில் அளித்தனர்.


Next Story