திராவிட மாடல் ஆட்சி எல்லாவற்றையும் உருவாக்கும், எதையும் சிதைக்காது- தங்கம் தென்னரசு பேச்சு
தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று நடைபெற்றது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே உள்ள பொம்மைகுட்டைமேட்டில் தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் என சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு, திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம் என்ற தலைப்பில் பேசியதாவது-
மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி. சுய மரியாதை, சமூக நீதி, மதசார்பின்மை, கூட்டாட்சி தத்துவம், மாநில உரிமைகள், தமிழ் மொழிக்கான வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஆட்சி முறையை கொண்டு வருவது தான் திராவிட மாடலுடைய ஆட்சி.அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சட்டம், திறனுக்கு ஏற்ப வேலைவாய்ப்பு, சம வேலை வாய்ப்புகள் என எல்லா மாவட்டத்திலும், எல்லா துறைகளிலும் உருவாக்க தூணாக நிற்கும் திராவிட மாடல் ஆட்சி. திராவிட மாடல் ஆட்சி எல்லாவற்றையும் உருவாக்கும்,
எதையும் சிதைக்காது, சீர்தூக்கும், யாரையும் பிரிக்காது எல்லோரையும் ஒன்று சேர்க்கும். யாரையும் இந்த ஆட்சி தாழ்த்தாது அனைவரையும் சமமாக நடத்தும், யாரையும் இந்த ஆட்சி புறக்கணிக்காது தோளோடு தோள் நின்று அனைவரையும் அரவணைக்கும். இந்த கோட்பாடுகளைத்தான் ஆட்சி பொறுப்பு ஏற்று ஓராண்டு காலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து இன்று நிரூபித்து வருகிறார்.என தெரிவித்தார்.