குளங்களில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் கலெக்டர் அரவிந்த் பேச்சு


குளங்களில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்  கலெக்டர் அரவிந்த் பேச்சு
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குளங்களில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பருவமழை முன்ெனச்சரிக்கை ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குளங்களில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பருவமழை முன்ெனச்சரிக்கை ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் மற்றும் மண்டல அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் தேவையான தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பெருவெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய கால்வாய் மற்றும் குளக்கரைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடித்தல் அவசியம். மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தாலுகாவிற்கு உட்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

மணல் மூட்டைகள் தயார்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றி தங்க வைக்கும் இடங்களை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நீர்வழி தடங்களில் ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றிட ஏற்கனவே நீர் ஆதாரத்துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரை கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

பருவமழை காலங்களில் சீரமைப்பு பணிகளுக்கு தேவையான மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், பொக்லைன் எந்திரங்கள், மின் மோட்டார் போன்றவற்றை போதுமான அளவில் தயார் நிலையில் வைக்க வேண்டும்.

தற்காலிக தங்கும் முகாம்களை உடனடியாக பார்வையிட்டு அவற்றில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்பதை உறுதி செய்ய வேண்டும். கடந்த வெள்ளப்பெருக்கின் போது கரைகள் உடைந்த நீர்நிலைகளின் உடைப்பு ஏற்பட்ட பகுதியின் அருகாமையில் தேவையான மணல் மூட்டைகளை முன்பாகவே அடுக்கி வைக்க வேண்டும்.

தேவையான உதவிகள்

பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் ஆறு மற்றும் கடலோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கவும், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை நீர்நிலை பகுதிகளுக்கு அழைத்துச் செல்லாமல் தற்காத்துக் கொள்ளவும், தன்னார்வலர்கள், முதல் நிலை மீட்பாளர்கள் மற்றும் ஆப்த மித்ரா நண்பர்கள் ஆகியோர் தங்கள் பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, பத்மநாபபுரம் சப்- கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story