4 ஆண்டாக முடங்கிய குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது


4 ஆண்டாக முடங்கிய குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வட்டிக்கொல்லி கிராமத்தில் 4 ஆண்டாக முடங்கிய குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததால், ஆதிவாசி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

நீலகிரி

கூடலூர்

வட்டிக்கொல்லி கிராமத்தில் 4 ஆண்டாக முடங்கிய குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததால், ஆதிவாசி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

குடிநீர் திட்டம்

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட வட்டிக்கொல்லியில் 50-க்கும் மேற்பட்ட ஆதிவாசி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிநீர் வசதி இல்லாமல் கடும் அவதி அடைந்து வந்தனர். இதனால் பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு கடந்த 2019-ம் ஆண்டு எஸ்.ஏ.டி.பி. மூலம் ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து கிணறு, நீர்த்தேக்க தொட்டி, பம்பு அறை கட்டும் பணி நடைபெற்றது. ஆனால் தடையில்லா சான்று கிடைக்காததால் மின் இணைப்பு பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் குடிநீர் திட்டம் முடங்கியது. தொடர்ந்து ஆதிவாசி மக்களும் சிரமம் அடைந்து வந்தனர்.

தடையில்லா சான்று

இந்த நிலையில் தேவர்சோலை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஆதிவாசி மக்கள் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து தடையில்லா சான்று வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் இணைப்பும் பெறப்பட்டது.

இதையடுத்து சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு குடிநீர் திட்டம் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. இதனை பேரூராட்சி துணைத்தலைவர் யூனைஷ் பாபு தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆதிவாசி மக்கள் குடங்களில் தண்ணீரை பிடித்தனர். நீண்ட கால கோரிக்கை நிறைவேறி உள்ளதாக அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மகிழ்ச்சி

இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் மழைக்காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. கோடை காலத்தில் குடிநீர் கிடைக்காமல் வனவிலங்குகள் அச்சுறுத்தல்களுக்கு இடையே தொலைதூரம் குடங்களை தூக்கிச்சென்று வெளியிடங்களில் இருந்து எடுத்து வர வேண்டிய நிலை இருந்தது. நீண்ட நாள் கோரிக்கைக்கு பிறகு தற்போது எங்கள் பகுதியில் குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது மகிழ்ச்சியை அளிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story