பயன்பாட்டில் இருக்கும் குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாத நிலை


பயன்பாட்டில் இருக்கும் குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாத நிலை
x

திருத்தங்கல் பகுதியில் உள்ள ஒரு குடிநீர் நீர்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்படாமல் தற்போது வரை அதில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

சிவகாசி,

திருத்தங்கல் பகுதியில் உள்ள ஒரு குடிநீர் நீர்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்படாமல் தற்போது வரை அதில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குடிநீர் தொட்டி

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் உள்ள சிறிய அளவிலான பாறையின் மீது கடந்த 1970-ம் ஆண்டு அப்போதைய பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டி அதில் குடிநீர் சேமித்து வைத்து திருத்தங்கல் பகுதி மக்களுக்கு வினியோகம் செய்து வந்தது.

குடிநீர்தொட்டி செயல்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகள் ஆனதால் தொட்டியின் மேல் பகுதி சேதம் அடைந்து திறந்தே இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அந்த குடிநீர் தொட்டியில் தண்ணீர் சேமிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் தொட்டிக்கு செல்லும் பாதைகளை தனிநபர்கள் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி பயன்படுத்தி வருவதால் சுத்தம் செய்ய குடிநீர் தொட்டிக்கு செல்ல முடியாமல் ஊழியர்கள் திணறி வருகிறார்கள்.

துர்நாற்றம்

இதனால் குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் அதில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த தொட்டியில் இருந்து பெறப்படும் தண்ணீரை சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 24 வார்டுகளில் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் நீண்ட வருடங்களாக அந்த குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் அதில் இருந்து பெறப்படும் தண்ணீர் துர்நாற்றம் வீசுவதாக திருத்தங்கல் மக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

மேயரிடம் முறையீடு

இதுகுறித்து அந்த பகுதி மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீநிகா சீனிவாசபெருமாளிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, பெருமாள் கோவில் அருகில் உள்ள குடிநீர் தொட்டி பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் இருப்பதாக மக்கள் புகார் தெரிவித்தனர். அந்த தொட்டியை பார்க்க சென்ற போது பாதையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது ெதரியவந்தது.

இதுகுறித்து மேயர் மற்றும் மண்டல தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளேன்.

ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றிவிட்டு, குடிநீர் தொட்டியை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story