மதுபோதையில் பள்ளி வாகனத்தை ஓட்டி வந்து படுத்து தூங்கிய டிரைவர்
மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்து படுத்து தூங்கிய டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வாகனத்தில் இருந்த மாணவ-மாணவிகள் தவித்தனர்.
வடவள்ளி,செப்
மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்து படுத்து தூங்கிய டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வாகனத்தில் இருந்த மாணவ-மாணவிகள் தவித்தனர்.
பள்ளி வேன்கள்
கோவையை அடுத்துள்ள கோவைபுதூர் பகுதியில் சி.எஸ் அகாடமி பள்ளி உள்ளது. இங்கு பயிலும் குழந்தைகளை பெற்றோர்கள் சிலர் பள்ளிக்கு அழைத்து வந்து விட்டு சென்று பின்னர் பள்ளி முடிந்தவுடன் அழைத்துச் செல்வார்கள். இது தவிர பல மாணவ-மாணவிகள் பள்ளி வானங்கள் மூலம் வந்து செல்கின்றனர். இந்த வாகனங்களை பள்ளி நிர்வாகம் காண்டிராக்ட் முறையில் இயக்கி வருகின்றது.
போதையில் டிரைவர்
இந்த நிலையில் நேற்று வடவள்ளியில் இருந்து குழந்தைகளை ஏற்றிக்கொண்டு அந்த பள்ளி வேன் வந்தது. பின்னர் அந்த வேன் குருசாமி நகர் பகுதியில் சாலையோரத்தில் திடீரென நின்று விட்டது.
ஏன் டிரைவர் வேனை நிறுத்துகிறார் என்று குழம்பி போன, அந்த வேனில் இருந்த மாணவ-மாணவிகள், தங்களது இருக்கைகளை விட்டு எழுந்து சென்று டிரைவரை பார்த்தனர். அப்போது டிரைவர் குறட்டை போட்டு தூங்கிக்கொண்டிருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ-மாணவிகள் பாதி வழியில் வேனை நிறுத்தி விட்டு டிரைவர் தூங்குகிறாரே? என்று சொல்ல முடியாமல் தவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் பள்ளிக்கூட வேன் சாலையில் நிற்பதை அறிந்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் விசாரித்தனர். அதில் வேனை ஓட்டி வந்த டிரைவர் மதுபோதையில ்இருந்ததும், போதை தலைக்கேறியதால் தனது இருக்கையிலே ஸ்டியரிங்கில் படுத்து தூங்கியதும் தெரிந்தது.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும், அந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடனடியாக பள்ளிக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மாற்று வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு, 12 மாணவ-மாணவிகள் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மதுபோதையில் வேனை ஓட்டி வந்தவர், போதை தலைக்கேறியது தெரிந்தும் வேனை நிறுத்தி விட்டு தூங்கி உள்ளார்.
ஆனால் அவர் தொடர்ந்து வேனை ஓட்டி இருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். ஆகவே மதுபோதையில் பள்ளி வானத்தை இயக்கிய டிரைவர் செந்தில் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து டிரைவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.