மாணவியை கடத்திய மினிவேன் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
ஜோலார்பேட்டை அருகே மாணவியை கடத்திய மினிவேன் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூரை அடுத்த பெரிய கண்ணாலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வன்னிய குமார். இவரது மகன் சந்தோஷ் குமார் (வயது 26). இவர் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் ஜோலார்பேட்டை அடுத்த கூத்தாண்டகுப்பம் பகுதியில் சந்தோஷ் குமார், மாணவியுடன் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நேற்று காலை அங்கு சென்று சந்தோஷ்குமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் சந்தோஷ்குமாருக்கு ஏற்கனவே இரண்டு வருடத்திற்கு முன்பு திருமணமாகி பிரியா என்ற மனைவி இருப்பதும், ஜோலார்பேட்டை அடுத்த புத்துக்கோவில் பகுதியில் மினிவேன் டிரைவராக வேலை செய்தபோது மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து சந்தோஷ்குமாரை போக்சோ சடத்தில், போலீசார் கைது செய்தனர்.