சாலையில் படுத்திருந்த நாய் மீது ஆட்டோவை ஏற்றிய டிரைவர்
நெல்லிக்குப்பத்தில் சாலையில் படுத்திருந்த நாய் மீது ஆட்டோவை ஏற்றிய டிரைவரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.
நெல்லிக்குப்பம்:
நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் பாரதியார் தெருவில் சாலையின் நடுவில் நேற்று காலை நாய் ஒன்று படுத்து கிடந்தது. அப்போது அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது நாயை பார்த்த டிரைவர் அதன் அருகில் வரும்போது மெதுவாக ஆட்டோவை இயக்கினார். பின்னர் திடீரென ஆட்டோவை வேகமாக இயக்கியதோடு, சாலையில் படுத்திருந்த நாய் மீது ஏற்றிவிட்டு சென்றார். இதில் பலத்த காயமடைந்த அந்த நாய் வலியால் துடிதுடித்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜாராம் என்பவர் உடனே கால் நடை மருத்துவரை வரவழைத்து காயமடைந்த நாய்க்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். நாய் மீது ஆட்டோவை டிரைவர் ஏற்றி சென்ற காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதில் வேண்டுமென்றே நாய் மீது ஆட்டோவை டிரைவர் ஏற்றிச்சென்றது தெரிந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதைபார்த்த பொதுமக்கள் மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்ட ஆட்டோ டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.