சாலையில் காயங்களுடன் பிணமாக கிடந்த டிரைவர்
மார்த்தாண்டம் அருகே சாலையில் காயங்களுடன் தனியார் நிறுவன டிரைவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே சாலையில் காயங்களுடன் தனியார் நிறுவன டிரைவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் நிறுவன டிரைவர்
அருமனை அருகே உள்ள களியல் மடத்துவிளை தெங்கம்பூத்தூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39). இவர் மேல்புறம் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு சுஜி(34) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மணிகண்டன் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். மாலையில் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.
பிணமாக கிடந்தார்
இந்த நிலையில் நேற்று காலையில் மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு கொட்டாரவிளை பகுதியில் சாலையோரத்தில் ஒரு ஆண் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதைக்கண்டு மார்த்தாண்டம் போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர்.
அதைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தது களியல் மடத்துவிளை தெங்கம்பூத்தூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்து வந்த அவரது மனைவி சுஜி, மணிகண்டனின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர், மணிகண்டனின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சாவில் சந்தேகம்
இதுகுறித்து மணிகண்டனின் மனைவி சுஜி மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது கணவர் மணிகண்டனின் சாவில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் எப்படி இறந்தார்?, அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.