இலங்கையில் ேபாலீசாரை தாக்கிவிட்டு படகில் பாம்பனுக்கு தப்பி வந்த டிரைவர் சிக்கினார்


இலங்கையில் ேபாலீசாரை தாக்கிவிட்டு படகில் பாம்பனுக்கு தப்பி வந்த டிரைவர் சிக்கினார்
x
தினத்தந்தி 8 Oct 2023 12:15 AM IST (Updated: 8 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் ஐஸ் போதை பவுடர் கடத்தலில் கைது செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் அங்குள்ள போலீசாரை தாக்கிவிட்டு படகில் தப்பி பாம்பனுக்கு வந்தார். அவரையும், அவருக்கு உதவிய ராமேசுவரம் கூட்டாளியையும் போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

போதைப்பொருள் கடத்தியவர்

இலங்கை மன்னார் பகுதியில் இருந்து படகு ஒன்றில் நேற்று முன்தினம் இரவு ஒருவர் புறப்பட்டு வந்துள்ளார். அவரை ஏற்றி வந்த படகோட்டிகள் 2 பேரும் தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள மணல் திட்டுப் பகுதியில் இறக்கிவிட்டு திரும்பி சென்றுள்ளனர்.

அந்த வழியாக ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த படகு ஒன்று சென்றது. அதில் இருந்த 2 மீனவர்கள் மணல் திட்டில் நின்றிருந்த இலங்கை நபரை தங்கள் படகில் ஏற்றி, பாம்பன் குந்துகால் கடற்கரையில் இறக்கி விட்டுள்ளனர்.

ஆனால், அந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரையும், அவருடைய கூட்டாளியாக சந்தேகப்படும் ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஒருவரையும் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பிடித்து பாம்பன் போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தனர்.

தீவிர விசாரணை

பின்னர் இருவரும் மண்டபம் கடலோர காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாசர் மவுலானா தலைமையில் போலீசாரும், கியூ பிரிவு போலீசார், மத்திய உளவு போலீசாரும் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இலங்கை மன்னார் பேசாளை பகுதியைச் சேர்ந்த தேவராஜன் (வயது 43) என்பதும், இவர் மன்னார் மாவட்டம் முருங்கன் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை செய்ததாகவும் தெரியவந்தது. இவரும், மேலும் 2 பேரும் சேர்ந்து ஆம்புலன்சில் சில நாட்களுக்கு முன்பு, இலங்கையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு ஐஸ் போதை பவுடரை கடத்தி உள்ளனர்.

மன்னார் போலீசார் ஆம்புலன்சை நிறுத்தி சோதனை செய்து ஐஸ் போதைப்பொருளை பறிமுதல் செய்ததுடன் ஆம்புலன்ஸ் டிரைவர் தேவராஜன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

கடத்தல் வழக்குகள்

விசாரணைக்கு பின்னர் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்த கொண்டு சென்றுள்ளனர். அப்போது தேவராஜன், இலங்கை போலீசாரின் கையை கடித்து தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாக இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு மன்னார் பேசாளை பகுதியில் இருந்து படகு ஒன்றில் தமிழகத்துக்கு தப்பிவர திட்டமிட்டார். இதற்காக படகோட்டிகள் 2 பேருக்கு இலங்கை பணம் ரூ.1½ லட்சம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. படகோட்டிகள் இருவரும் தேவராஜனை அழைத்து வந்து, தனுஷ்கோடி அருகே மணல் திட்டில் இறக்கி விட்டு மீ்ண்டும் இலங்கையை நோக்கி தப்பிச்சென்றுள்ளனர்.

ேதவராஜன் தப்பி வந்ததை அறிந்ததும், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சந்தியாசதீஷ் என்பவர் சென்று அவரை சந்தித்து இருக்கிறார். இருவரும் கூட்டாளிகளாக இருக்கலாம் என தெரிகிறது. தேவராஜனை கோவைக்கு அனுப்பி வைப்பதற்காக பாம்பன் கடற்கரையில் இருந்து அழைக்க வந்தபோது இருவரும் பொதுமக்களிடம் சிக்கினர். தேவராஜன் மீது இலங்கையில் பல கடத்தல் வழக்குகள் உள்ளன.

கைது

விசாரணைக்கு பிறகு தேவராஜன் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சந்தியா சதீஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இலங்கையை சேர்்ந்த தேவராஜனை சென்னை புழல் சிறையிலும், தங்கச்சிமடத்தை சேர்ந்தவரை ராமநாதபுரம் சிறையிலும் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து இருவரும் சிறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதே நேரத்தில் படகோட்டிகள் இறக்கி விட்டுச்சென்ற மணல் திட்டில் இருந்து பாம்பன் குந்துகால் கடற்கரைக்கு தேவராஜனை அழைத்து வந்த மீனவர்கள் யார், எந்த படகில் அழைத்து வந்து பாம்பனில் இறக்கிவிட்டார்கள்? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகின்றது.


Next Story