டிப்பர் லாரிகளை நிறுத்தி டிரைவர்கள் திடீர் போராட்டம்


டிப்பர் லாரிகளை நிறுத்தி டிரைவர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் டிப்பர் லாரிகளை நிறுத்தி டிரைவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

மலைப்பாதையில் அனுமதி

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு பழனி வழியாக மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதையில் கடந்த 6 மாதமாக டிப்பர் லாரிகள் செல்ல அனுமதி அளிக்கப்படுவதில்லை.

காரணம் சவுரிக்காடு அருகில் மலைப்பாதை சேதம் அடைந்து இருந்தது. தற்போது அந்த பகுதியில் தற்காலிகமாக சாலை சீரமைக்கப்பட்டு, பஸ் ேபாக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சில டிப்பர் லாரிகளுக்கு அரசு பணி என்று சிறப்பு அனுமதி வழங்கி பழனி-கொடைக்கானல் மலைப்பாதை வழியாக சென்று வருகின்றன.

லாரி டிரைவர்கள் போராட்டம்

தனியார் டிப்பர் லாரிகள் வத்தலக்குண்டு வழியாக கொடைக்கானலுக்கு சென்று வருகின்றன. இதனால் கட்டிட பொருட்களை ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. மேலும் கட்டிட பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் கொடைக்கானலில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று பழனியில் கொடைக்கானல் மலைப்பாதை சோதனை சாவடிக்கு 10 டிப்பர் லாரிகளுடன் டிரைவர்கள் திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் லாரிகளை சாலையின் ஒருபுறத்தில் நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பழனி வழியாக ெகாடைக்கானல் மலைப்பாதையில் டிப்பர் லாரிகள் இயக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். அரசு பணிக்கு சிறப்பு அனுமதி என்றுகூறி தனியார் கட்டிட வேலைக்கு சிலர் ெபாருட்களை கொண்டு செல்கின்றனர். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் அவர்கள் சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர்.

டிப்பர் லாரிகளை நிறுத்தி டிரைவர்கள் போராட்டம் நடத்தியதால் பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story