மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை துரத்திய யானைகள்
ஆசனூர் அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபரை யானைகள் துரத்தின. அவர் சரக்கு வாகனத்தில் ஏறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தாளவாடி
ஆசனூர் அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபரை யானைகள் துரத்தின. அவர் சரக்கு வாகனத்தில் ஏறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
வாலிபரை துரத்தின
சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் நோக்கி வாலிபர் ஒருவர் தனது மோட்டார்சைக்கிளில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தார். இவர் ஆசனூர் அருகே சென்ற போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக அங்கு சுற்றி திரிந்தன. வாலிபரை பார்த்ததும் யானைகள் அவரை துரத்தின.
இதனால் அந்த வாலிபர் பயந்து மோட்டார்சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து தலைதெறிக்க ஓடினார். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு வாகனம் வந்து கொண்டிருந்தது. அந்த வாகனத்தை வாலிபர் தடுத்து நிறுத்தி அதில் ஏறி சென்றார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக யானைகளிடம் இருந்து உயிர் தப்பினார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
போக்குவரத்து பாதிப்பு
இதற்கிடையே யானைகளுக்கு பயந்து அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் சற்று தூரத்திலேயே தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். ஒரு சிலர் யானைகள் வாலிபரை துரத்தும் காட்சியை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர்.
இதற்கிடையே யானைகள் அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்து கரும்புகள் உள்ளதா? என தேடி பார்த்தன. அதன்பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டன. யானைகளால் ஆசனூர் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, 'யானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து வாகன ஓட்டிகளை துரத்தி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே வனத்துறையினர் யானைகளை வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.