பொன்னாறு வாய்க்கால் முகப்பு பகுதியில் மண்மேட்டை அகற்ற வலியுறுத்தல்
பொன்னாறு வாய்க்கால் முகப்பு பகுதியில் மண்மேட்டை அகற்ற வலியுறுத்தப்பட்டது.
தாமரைக்குளம்:
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
இதில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் பேசுகையில், தடுப்பணைகளை கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும். பத்திரப்பதிவு அலுவலகத்தில் 10 சென்டுக்குள் உள்ள நிலத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் ஆவணங்களை பெற்றுக்கொண்டு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி இரு புறங்களிலும் மரக்கன்றுகளை நட வேண்டும், என்றார்.
பயிர்களுக்கு இழப்பீடு
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாவட்ட பொதுச்செயலாளர் பாண்டியன் பேசுகையில், ஸ்ரீபுரந்தான் ஊராட்சியில் உள்ள வவானி சுடுகாட்டுப்பாதை சேறும், சகதியுமாக உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துடன் இறந்தவர் உடலை கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்த பாதையை மாவட்ட நிர்வாகம் சீரமைக்க வேண்டும், என்றார்.
காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் பேசுகையில், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் வடகரையில் உள்ள தூத்தூர், வைப்பூர், முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், ஸ்ரீபுரந்தான், அரங்கோட்டை, அணைக்குடி போன்ற பகுதிகளில் பருத்தி, சூரியகாந்தி, சோளம், நெல் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும். தூத்தூர் கிராமத்திற்கும், தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை கிராமத்திற்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை திட்டத்தை செயல்படுத்த முதல்-அமைச்சரிடம் கலெக்டர் வலியுறுத்த வேண்டும். குருவாடி தலைப்பில் உள்ள ெபான்னாறு வாய்க்காலில் முகப்பு பகுதியில் மண்மேட்டை அகற்ற வேண்டும், என்றார்.
ஏரியை தூர்வார அனுமதி
சமூக ஆர்வலர் தியாகராஜன் அளித்த மனுவில், ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட சோழகங்கம் ஏரியை தனியார் அமைப்பினர் தூர்வார மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். இதன் மூலம், சுமார் 700 ஏக்கர் பரப்பளவுள்ள அந்த ஏரியின் மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும், என்று கூறியிருந்தார்.
சுப்பராயபுரத்தை சேர்ந்த ராமலிங்கம் அளித்த மனுவில், சுப்பராயபுரம் அருகில் விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியில் உள்ள ெரயில்வே துறையின் சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.