புதுமண்ணியாற்றில் கரையை பலப்படுத்தி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்


புதுமண்ணியாற்றில் கரையை பலப்படுத்தி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாதானத்தில் இருந்து தற்காஸ் வரை புதுமண்ணியாற்றில் கரையை பலப்படுத்தி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

மாதானத்தில் இருந்து தற்காஸ் வரை புதுமண்ணியாற்றில் கரையை பலப்படுத்தி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுமண்ணியாறு பாசன வாய்க்கால்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன வாய்க்காலாக இருந்து வருவது புது மண்ணியாறு பாசன வாய்க்கால் ஆகும். இதன் மூலம் கொள்ளிடம் பகுதியில் நூற்றுக்கணக்கான கிளை வாய்க்கால்கள் பிரிந்து சென்று சுமார் 10,000 க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி அளித்து தருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் மணஞ்சேரி என்ற இடத்தில் காவிரியிலிருந்து மண்ணியாறு என்ற பெயரில் பிரிந்து நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியே புகுந்து புதுமண்ணியாறு என்ற பெயரில் உருமாற்றம் பெறும் இந்த வாய்க்கால், கொள்ளிடம் பகுதியில் பாசன வசதி அளித்துவிட்டு இறுதியில் பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே தற்காஸ் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் கலந்து வங்க கடலில் சங்கமிக்கிறது.

தடுப்புச்சுவர்

இது குறித்து புதுப்பட்டிணம் பாசனதார் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது. கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன வாய்க்காலாக இருந்து வரும் இந்த வாய்க்கால் விலைநிலங்களுக்கு பாசன வசதி அளித்து வருவதில் பெரும் பங்கு வகித்து வருவதுடன் மழைக்காலத்தில் வடிகாலாக செயல்பட்டு வருகிறது.

இந்த வாய்க்காலில் கடந்த வருடம் மாதானம் கிராமத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்காலின் உள்பகுதியில் பாதுகாப்புக் கருதி இரண்டு கரை பகுதியை ஒட்டியும் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டு வாய்க்கால் நடுப் பகுதியிலும் கான்கிரீட் தளம் அமைத்து தண்ணீர் எளிதில் வேகமாகச் சென்று வடியும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.

மண் சரிவு

தற்போது புதுமண்ணியாற்றில் பழைய பாளையம், தாண்டவன் குளம் புதுப்பட்டிணம், தற்காஸ், உள்ளிட்ட பகுதிகளில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்காலின் இரு புறங்களிலும் தடுப்புச் சுவர் அமைக்காதால் புது மண்னியாறு கரைகள் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் பழையார்- சீர்காழி சாலை ஓரம் அமைந்துள்ள சாலைகள் சேதமடைந்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் அதிக அளவில் வாகன விபத்து ஏற்படுகிறது. எனவே கடைமடை பகுதி விவசாயிகள் நலன் கருதி மாதானம் வரை அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தடுப்பு சுவர் தற்காஸ் வரை புதுமணியாற்றில் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.


Next Story