முதியவரை திட்டி வெளியேற்றிய ஊழியர்
முதியவரை திட்டி வெளியேற்றிய ஊழியர்
கோத்தகிரி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஸ் நிலையம் அருகே பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 400 வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் நாள்பட்ட நோய் உள்ளவர்கள் வந்து மருந்து, மாத்திரைகள் வாங்கி செல்கின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாத்திரை வாங்க வந்த முதியவர் ஒருவரிடம், ஆஸ்பத்திரி ஊழியர் மாத்திரை இல்லை என்று கூறினார். அதற்கு அந்த முதியவர் என்னால் நடக்க முடியவில்லை, கால்கள் நடுங்குகின்றன, எவ்வளவு முறை வர முடியும் என்று கேட்டார். அதற்கு அந்த ஊழியர் மாத்திரை இல்லை என்று கூறி கடுமையான வார்த்தைகளால் திட்டி அவரை வெளியே அனுப்பினார். இந்த காட்சியை, அங்கு நின்றிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது.