மின்சார ரெயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்து ஊழியர் பலி


மின்சார ரெயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்து ஊழியர் பலி
x

ஆவடியில் மின்சார ரெயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த ரெயில்வே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆவடி,

திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டு கணேஷ் நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 50). இவர் சென்னை எழும்பூர் ரெயில்வேயில் சிக்னல் டிசைனராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு யாமினி என்ற மகளும், ரிஷிகுமார் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்ற முத்துகிருஷ்ணன் வேலை முடிந்து இரவு 10 மணி அளவில் ஆவடியில் இருந்து வேப்பம்பட்டு செல்வதற்காக அரக்கோணம் நோக்கி வந்த புறநகர் மின்சார ரெயிலில் ஏற செல்லும் போது ரெயில் புறப்பட்டது.

இதற்கிடையில் அவர் ரெயிலில் ஏற முயன்ற போது தவறி பிளாட்பாரத்தில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறினர். இந்த விபத்து குறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story