நீர்வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்


நீர்வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
x

நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

நாமக்கல்

குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு சூடான குடிநீர் கிடைக்கும் வகையில் குடிநீர் எந்திரம் அமைக்க வேண்டும், மோகனூர் அடுத்த ஆவல்பாறையில் இருந்து கருமாண்டம் பாளையத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும், நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், மரவள்ளி பயிருக்கு விதைக்கரணை மற்றும் இடு பொருட்களை உரிய காலத்தில் வேளாண் அதிகாரிகள் வழங்க வேண்டும்.

கோழிப்பண்ணைகளால் ஏற்படும் ஈ தொல்லையை கட்டுப்படுத்த மருந்து அடிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். மேலும் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் அறிவிக்கப்பட்டதில் இருந்து கிராமப்புறங்களில் அரசு பஸ் இயக்கம் குறைந்துவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகள் கோரிக்கை

முன்பை போல கிராமப்புறங்களில் அரசு பஸ் போக்குவரத்தை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை கொடுக்கப்பட்டது. அதேபோல் பால் உற்பத்தியாளர்களிடம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கட்டாயப்படுத்தி ஆவின் இனிப்புகளை விற்கக் கூடாது எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர் உமா, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், உதவி கலெக்டர்கள் சரவணன், சுகந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் முருகேசன், தோட்டக்கலை துணை இயக்குனர் கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன், மோகனூர் பகுதிகளில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சிலர் கருப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டனர்.


Next Story