ஊருணி சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்படுகிறது
சிவகாசியில் ஊருணி சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்படுகிறது
சிவகாசி
சிவகாசி மாநகராட்சியின் மையப்பகுதியில் உள்ள பஸ் நிலையத்தின் எதிரில் பொத்தமரத்து ஊருணி உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊருணி மக்கள் பயன்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ஊருணியை சுற்றியுள்ள பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து ஊருணிக்கு தண்ணீர் வரும் பாதைகள் அடக்கப்பட்டதன் காரணமாக ஊருணியில் இருந்த தண்ணீர் வற்றி பயன்பாடு இல்லாமல் போனது. இந்தநிலையில் ஊருணியை தூர்வார தமிழக அரசு ரூ.1 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கியது. இந்த நிதியில் அந்த பகுதியில் பூங்கா மற்றும் நடைபயிற்சி தளம் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை கடந்த ஆண்டு மே மாதம் சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், மேயர் சங்கீதா இன்பம் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த தூர்வாரும் பணி ஒரு வருடம் ஆகியும் 20 சதவீத பணிகள் மட்டுமே நடந்துள்ளது. ஊருணி சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் தற்போது ஊருணி சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றத் தேவையான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ளது. ஊருணியை சுற்றி உள்ள பகுதியில் இருக்கும் 6 கட்டிடங்களை இன்று மணல் அள்ளும் எந்திரம் மூலம் அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான அளவீடு பணிகளை நேற்று செய்தனர். இன்று காலை 10 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது. ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.