பணம் கேட்டு மூதாட்டியை மிரட்டிய என்ஜினீயர் சிக்கினார்
வாட்ஸ்-அப் மூலம் விதவிதமான புகைப்படங்களை அனுப்பிய விவகாரத்தில் பணம் கேட்டு மூதாட்டியை மிரட்டிய என்ஜினீயர் சிக்கினார். கர்நாடக போலீசார் குமரிக்கு வந்து அவரை பிடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திங்கள்சந்தை:
வாட்ஸ்-அப் மூலம் விதவிதமான புகைப்படங்களை அனுப்பிய விவகாரத்தில் பணம் கேட்டு மூதாட்டியை மிரட்டிய என்ஜினீயர் சிக்கினார். கர்நாடக போலீசார் குமரிக்கு வந்து அவரை பிடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புகைப்படங்களை அனுப்பிய மூதாட்டி
குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள தலக்குளம் பட்டரி விளை பகுதியைச் சேர்ந்தவர் மரிய நெல்சன். இவருடைய மகன் அருள் (வயது 30). என்ஜினீயரிங் பட்டதாரி.
இவருக்கும், பெங்களூருவை சேர்ந்த திருமணமான 60 வயது மூதாட்டி ஒருவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நட்பாக மாறி இவர்கள் தங்களுடைய வாட்ஸ்-அப் செல்போன் நம்பர்களையும் பரிமாறிக் கொண்டனர்.
இதன் மூலம் தன்னுடைய விதவிதமான புகைப்படங்களை ஆர்வ கோளாறு காரணமாக மூதாட்டி அருளுக்கு அனுப்பியுள்ளார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருள், அவரிடம் ரூ.12 ஆயிரம் கேட்டுள்ளார். உடனே அவர் கூகுள்பே மூலம் பணம் அனுப்பியுள்ளார்.
பணம் கேட்டு மிரட்டினார்
அதன்பிறகு மேலும் எனக்கு பணம் வேண்டும் என அவர் கேட்டாராம். ஆனால் மூதாட்டி பணம் இல்லையென்று கூறியுள்ளார். அப்போது தான் அருள் தனது சுயரூபத்தை காட்டியுள்ளார். அதாவது பணம் தரவில்லையென்றால், நீ எனக்கு அனுப்பிய விதவிதமான புகைப்படத்தை உன்னுடைய கணவருக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், இந்த விவகாரம் கணவருக்கு தெரிந்து விடுமோ? என பயந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் போலீசாரிடம் கூறுகையில், அருள் பணம் கேட்டு மிரட்டியதை கூறியுள்ளார். உடனே இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
என்ஜினீயர் சிக்கினார்
பிறகு அருளை பிடிக்க கர்நாடக போலீசார் குமரி மாவட்டம் விரைந்தனர். இங்கு இரணியல் போலீசாரின் உதவியுடன் அவரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவரை விசாரணைக்காக கர்நாடக மாநிலத்திற்கு அழைத்துச் சென்றனர்.
திருமணமான 60 வயது மூதாட்டியிடம் பழகி பணம் கேட்டு மிரட்டியதாக குமரி என்ஜினீயர் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.