முன்னாள் ராணுவவீரர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்
ஜோலார் போட்டை அருகே விபத்தில் இறந்த முன்னாள் ராணுவ வீரரின் உடலை தோண்டி எடுத்து பிரேதபரிசோதனை செய்ய வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில் மனைவு புகார் செய்துள்ளார்.
ஜோலார் போட்டை அருகே விபத்தில் இறந்த முன்னாள் ராணுவ வீரரின் உடலை தோண்டி எடுத்து பிரேதபரிசோதனை செய்ய வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில் மனைவு புகார் செய்துள்ளார்.
விபத்தில் பலி
ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி புதூர் பகுதியை சேர்ந்தவர் ரஜினி (வயது 48). இவர் கடந்த 17 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்க 2 மகன்கள் உள்ளனர். கடந்த மாதம் 20-ந் தேதி ஆம்பூர் பகுதியில் உள்ள ராணுவ கேண்டீனுக்கு வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக, ரஜினி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டு இருந்தார்.
குடியானகுப்பம் அண்ணாமலை தெரு என்ற இடத்தில் வந்தபோது நிலைத்தடுமாறி கிழே விழுந்து காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடந்த 22-ந் தேதி சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்
அவரது உடலை 22-ந் தேதி மாலை ஜோலார்பேட்டை அருகே புள்ளானேரி பகுதியில் உள்ள சின்னகுட்டுர் சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். அதன் பின்னர் பென்ஷன் பெறுவதற்கு, அவரது மனைவி ஜெயஸ்ரீ ராணுவ அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். அப்போது முன்னாள் ராணுவ வீரரின் பென்ஷனை மனைவி பெயருக்கு மாற்றி தருவதற்கு பிரேத பரிசோதனை அறிக்கை இருந்தால் தான் மாற்ற முடியும் என கூறி உள்ளனர்.
அதைத்தொடர்ந்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஜெயஸ்ரீ புகார் கொடுத்தார். அதில் தனது கணவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அரசு வழக்குப் பதிவு செய்தார். திருப்பத்தூர் கோட்டாட்சியர் அனுமதி பெற்ற பிறகு முன்னாள் ராணுவ வீரர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.