முன்னாள் ராணுவ வீரரின் உடல் ஒரு மாதத்திற்கு பிறகு தோண்டி எடுப்பு
ஜோலார்பேட்டை அருகே முன்னாள் ராணுவ வீரர் உடலை பிரேத பரிசோதனை செய்யக் கோரி மனைவி கொடுத்த புகாரின்பேரில் ஒரு மாதத்திற்கு பிறகு உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
ஜோலார்பேட்டை அருகே முன்னாள் ராணுவ வீரர் உடலை பிரேத பரிசோதனை செய்யக் கோரி மனைவி கொடுத்த புகாரின்பேரில் ஒரு மாதத்திற்கு பிறகு உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
முன்னாள் ராணுவ வீரர்
ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி புதூர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் ரஜினி (வயது 48). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயஸ்ரீ. கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி ஆம்பூர் பகுதியில் உள்ள ராணுவ கேண்டீனுக்கு சென்று பொருட்கள் வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளிள் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.குடியானகுப்பம் அண்ணாமலை தெரு என்ற இடத்தில் நிலை தடுமாறி கிழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்து விட்டார்.
உடல் தோண்டி எடுப்பு
அவரது உடலை உறவினர்கள் ஜூலை மாதம் 22-ந் தேதி மாலை அடக்கம் செய்து விட்டனர். அதன் பின்னர் பென்ஷன் பெறுவதற்கு அவரது மனைவி ஜெயஸ்ரீ ராணுவ அலுவலகத்திற்கு சென்றபோது முன்னாள் ராணுவ வீரரின் பென்ஷன் மனைவி பெயருக்கு மாற்றி தருவதற்கு பிரேத பரிசோதனை அறிக்கை இருந்தால் தான் முடியும் என கூறியதால் ஜெயஸ்ரீ கடந்த ஆகஸ்டு மாதம் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரசு, வழக்குப் பதிவு செய்தார்.
இந்தநிலையில் பிணத்தை தோண்டி எடுக்க திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமியிடம் அனுமதி பெற்று ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று காலை நாட்டறம்பள்ளி தாசில்தார் பூங்கொடி, ஜோலார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அரசு மற்றும் போலீசார் முன்னிலையில் முன்னாள் ராணுவ வீரர் ரஜினி உடலை தோண்டி எடுத்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர் ஜுவகன் தலைமையில் அடங்கிய மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். அதன் பிறகு அதே இடத்தில் புதைத்தனர்.