ஈரோட்டில் பரபரப்பு: தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த வாலிபர் கைது மேலும் ஒருவரிடம் தீவிர விசாரணை
வாலிபர் கைது
ஈரோட்டில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் மற்றொரு வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிகாரிகள் சோதனை
கர்நாடக மாநிலம் பெங்களூரு திலக்நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 24-ந் தேதி திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக அக்தர் உசேன் லஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் சேலத்தில் பதுங்கி இருந்த அப்துல் அலி ஜூபா என்பவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் வசிக்கும் 2 வாலிபர்களுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் குழுவினர் ஈரோடு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தீவிர விசாரணை
ஈரோடு மாணிக்கம்பாளையம் மெயின் ரோட்டில் வசிப்பர் மகபூப். இவருடைய மகன் ஆசிப் முசாப்தீன் (வயது 28), ஈரோடு கருங்கல்பாளையம் பி.பி.அக்ரஹாரம் நஞ்சப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் யாசின் (31). இவர்கள் இருவரும்தான் சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவே இவர்களுடைய வீட்டிற்குள் மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் (ஐ.பி) அதிரடியாக நுழைந்து விசாரணை நடத்தினர்.
மேலும் இவர்கள் 2 பேரும் தகவல் தொடர்புக்கு பயன்படுத்திய ஸ்மார்ட் போன், லேப்டாப், டைரிகள், சிம்கார்டுகள், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள போலீஸ் குடியிருப்புக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்குள்ள ஒரு தனி வீட்டில் வைத்து, அவர்களிடம் மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று 2-வது நாளாக தீவிர விசாரணை நடத்தினர்.
வாலிபர் கைது
இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிடிபட்ட இருவரிடமும் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தனரா?, நாட்டில் ஏதேனும் நாச வேலை செய்ய திட்டமிட்டு உள்ளார்களா?, தமிழகத்தில் உலக அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டியை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டப்பட்டதா? என்கிற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். இதில் ஆசிப் முசாப்தீன், ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆசிப் முசாப்தீன் மீது ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் உள்பட 7-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று இரவு கைது செய்தனர். மேலும், யாசினிடம் போலீசார் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக ஈரோட்டில் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.