கேர்மாளம் அருகே பரபரப்பு11 ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்றது


கேர்மாளம் அருகே பரபரப்பு11 ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்றது
x

கேர்மாளம் அருகே 11 ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு

தாளவாடி

கேர்மாளம் அருகே 11 ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

10 வனச்சரகங்கள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன.

இந்த வனச்சரகங்களுக்குட்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, யானை, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் காணப்படுகின்றன. இதில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி, சிறுத்தைப்புலி போன்ற வனவிலங்குகள் கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள ஆடு, மாடு, நாய்களை கடித்து கொன்றுவருவது வாடிக்கையாகி வருகிறது.

கடித்து கொன்றது

இதேபோன்ற சம்பவம் கேர்மாளம் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் நடந்து உள்ளது. அதன் விவிவரம் வருமாறு:-

கேர்மாளத்தை அடுத்த காடட்டி அருகே வனப்பகுதியையொட்டி உள்ள பேடர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜன். விவசாயி. இவர் 5 மாடுகள் மற்றும் 15 ஆடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம்போல் ஆடு, மாடுகளை மேய்த்துவிட்டு வீட்டின் முன்பு உள்ள பட்டியில் அவைகளை கட்டி வைத்துவிட்டு வீட்டுக்கு தூங்க சென்று விட்டார்.

பின்னர் நேற்று காலை எழுந்து வந்து பார்த்தபோது பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த 11 ஆடுகள் கடித்து குதறப்பட்டு இறந்துகிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சிறுத்தைப்புலி

இதுகுறித்து கேர்மாளம் வனத்துறைக்கு ராஜன் தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும் கேர்மாளம் வனச்சரகர் வெங்கடாசலம் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர். பின்னர் அந்த பகுதியில் பதிவான கால் தடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அந்த கால் தடம் சிறுத்தைப்புலியின் கால் தடம் என தெரியவந்தது. எனவே ஆடுகளை கடித்து கொன்றது சிறுத்தைப்புலிதான் என வனத்துறையினர் உறுதி செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுமக்கள் அச்சம்

ஒரே நாள் இரவில் கிராமத்துக்குள் புகுந்து 11 ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். இறந்த ஆடுகளுக்கு உண்டான இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிக்கு வழங்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


Related Tags :
Next Story