குன்னூரில் பழக்கண்காட்சி தொடங்கியது
கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக குன்னூரில் பழக்கண்காட்சி தொடங்கியது. இதில் பிரமாண்ட அலங்காரங்களை கண்டு சுற்றுலா பயணிகள் வியந்தனர்.
ஊட்டி
கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக குன்னூரில் பழக்கண்காட்சி தொடங்கியது. இதில் பிரமாண்ட அலங்காரங்களை கண்டு சுற்றுலா பயணிகள் வியந்தனர்.
பழக்கண்காட்சி
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கோடை விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டியில் மலர் மற்றும் ரோஜா கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி நடைபெற்றது.
கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக 63-வது பழக்கண்காட்சி, குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் பழங்களை கொண்டு பல்வேறு காட்சி திடல்கள் அமைக்கப்பட்டு இருந்தது. சிறப்பம்சமாக சுமார் 12 டன் அன்னாசி பழங்களை கொண்டு அமைக்கப்பட்ட பிரமாண்ட அன்னாசி பழம் பார்வையாளர்கள கவர்ந்தது.
கலைநிகழ்ச்சிகள்
மேலும் பழக்கூடை, பழ பிரமிடு, மண்புழு, மலபார் அணில் போன்ற வடிவங்களும், மீண்டும் மஞ்சப்பை திட்ட அலங்காரமும் இடம் பெற்றிருந்தது. இது தவிர நீலகிரி மாவட்டத்தின் 200-வது ஆண்டை கொண்டாடும் வகையில் ஊட்டி-200 என்ற அலங்காரம் காட்சிபடுத்தப்பட்டு இருந்தது. இதை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் திரளாக வந்து கண்டு ரசித்தனர்.
இந்த கண்காட்சியில் தோட்டக்கலைத்துறையின் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இதில் மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
இன்று நிறைவு
மேலும் சுற்றுலா பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம் சார்பில் இலவசமாக பொதுமக்களுக்கு மஞ்சப்பை வினியோகம் செய்யப்பட்டது. மேலும் ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் நடித்த பொம்மன்-பெள்ளி தம்பதி கவுரவிக்கப்பட்டனர். பழக்கண்காட்சி இன்றுடன்(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைய உள்ளது.
தொடக்க விழாவில் ஆ.ராசா எம்.பி., கலெக்டர் அம்ரித், மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் மோனிகா ரானா, தோட்டக்கலை துறை இணை இயக்குனர் கருப்புசாமி, துணை இயக்குனர் ஷிப்லா மேரி, உதவி இயக்குனர் பால சங்கர், குன்னூர் சிம்ஸ் பூங்கா தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் விஜயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மகிழ்ச்சி அளிக்கிறது
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-
நீலகிரிக்கு வந்தாலே உற்சாகம் பிறக்கிறது. கண்களுக்கு விருந்தளிக்கும் மலர் மற்றும் பழ அலங்காரங்களை பார்க்கும்போது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த ஆண்டு குடும்பத்துடன் பழக்கண்காட்சிக்கு வந்துள்ளோம். இங்கு பழங்களை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளது. மலபார் அணில் உருவம் அனைவரையும் கவர்கிறது. அதன் அருகில் சென்று புகைப்படம் எடுக்க அனுமதி தராதது வருத்தம் அளிக்கிறது.
பிரமாண்டமான அன்னாசி பழம் பார்க்கும்போதே வியப்பை ஏற்படுத்துகிறது. இதனால் அடுத்த ஆண்டும் இங்கு வர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.=