நெல்லை வர்த்தக மையத்தின் முகப்பு பகுதியை மாற்ற வேண்டும்-மேயரிடம் மனு
நெல்லை வர்த்தக மையத்தின் முகப்பு பகுதியை மாற்ற வேண்டும் என்று மேயரிடம், தி.மு.க.வினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
நெல்லை வர்த்தக மையத்தின் முகப்பு பகுதியை மாற்ற வேண்டும் என்று மேயரிடம், தி.மு.க.வினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன் பொது மக்களிடம் இருந்து மனுக்களை வாங்கி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார்.
இதில், நெல்லை மாநகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் கவுன்சிலர்கள் சுந்தர், நித்திய பாலையா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மேயரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
வர்த்தக மையம் முகப்பு பகுதி
அதில், ''நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி அலுவலகம் எதிரே வர்த்தக மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் முகப்பு பகுதி அ.தி.மு.க. கட்சியின் சின்னமான இரட்டை இலை போல் உள்ளது என்று பொது மக்கள் கருதுகிறார்கள். எனவே அதனை அகற்றிவிட்டு, புதிய முகப்பு தோற்றம் அமைக்க வேண்டும்.
நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு அண்ணா சிலை அருகில் பெரியார், கருணாநிதி ஆகியோர் சிலைகளும் அமைக்க வேண்டும்'' என்று கூறிஇருந்தனர்.
நெல்லை எஸ்.என்.ஹைரோடு வியாபாரிகள் சிலுவை பிச்சை, சிவபாலன், குமரேசன், பெர்டின் ராயன் உள்ளிட்டோர் கொடுத்த மனுவில், எஸ்.என்.ஹைரோடு, ஊருடையார்குடியிருப்பு ரோடு ஆகியவற்றை சீரமைத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
மரங்கள் அகற்றம்
பாளையங்கோட்டை பூ மார்க்கெட் ஆட்டோ டிரைவர்கள் அளித்த மனுவில், பாளையங்கோட்டை -திருச்செந்தூர் ரோட்டில் பூக்கடை அருகே பல ஆண்டுகளாக ஆட்டோக்களை நிறுத்தி இயக்கி வருகிறோம். அங்கு 4 மரங்களை வளர்த்து பராமரித்து வந்தோம். அதனை தற்போது அகற்றிவிட்டனர். எனவே மரங்களை அகற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறிஉள்ளனர்.
பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கொடுத்த மனுவில், ''பாளையங்கோட்டை தசரா மைதானத்தில் பழமையான மரங்களை வேரோடு பிடுங்கி அகற்றி விட்டனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறிஉள்ளனர். இதேபோல் பல்வேறு பகுதி மக்கள் மேயரிடம் மனுக்களை கொடுத்தனர். இதில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.