ஆசிரியர் மீதான பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்


ஆசிரியர் மீதான பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்
x

ஆசிரியர் மீதான பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த ஜேம்ஸ் சந்திரகுமார், தியாகராஜன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துதாஸ் என்பவர் முதுகலை வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 24-ந் தேதி பிளஸ்-1 வகுப்புக்கு நடத்திய தேர்வில் இரண்டு மாணவிகள் சினிமா பாடலை பதிலாக எழுதியுள்ளனர். இதனால் மாணவிகளிடம் பெற்றோரை அழைத்து வரும்படி கிறிஸ்துதாஸ் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பள்ளிக்கு வந்த பெற்றோர் மற்றும் சிலர் மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது தவறு இல்லை என அறிக்கை கொடுத்துள்ளார். ஆனால் பள்ளிக்கு தொடர்பு இல்லாத ஒரு அமைப்பை சேர்ந்த கும்பல் பள்ளிக்குள் அத்துமீறி புகுந்து ஆசிரியரை தாக்க முற்பட்டனர். கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்கள். முதற்கட்ட அனைத்து விசாரணையிலும் ஆசிரியர் மீது தவறு இல்லை என அறிக்கை கொடுத்த நிலையில் கடந்த 14-ந் தேதி போலீசார் போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்துள்ளனர். மேலும், பணி இடைநீக்கமும் செய்யப்பட்டு இருக்கிறார். இச்செயல் ஆசிரியர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, தவறு செய்யாத ஆசிரியர் கிறிஸ்துதாசை விடுதலை செய்ய வேண்டும். அவர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story