கொலைமுயற்சி வழக்கில் கைதானவர் குடும்பத்தினர் திடீர் சாலைமறியல்
ஆறுமுநேரியில் கொலைமுயற்சி வழக்கில் கைதானவர் குடும்பத்தினர் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் கொலைமுயற்சி வழக்கில் கைதான வாலிபர் குடும்பத்தினர் நேற்று மாலையில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொலை முயற்சி வழக்கு
ஆறுமுகநேரியில் அடைக்கலாபுரம் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 29-ந்தேதி இரவு ஓட்டலுக்குள் புகுந்து, அதன் உரிமையாளரும், தொண்டு நிறுவன நிர்வாகியுமான பால குமரேசனை ஒரு கும்பல் வாள், மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது. அதில் படுகாயம் அடைந்த பாலகுமரேசன் நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இந்த கொலை முயற்சி வழக்கில் சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிலரை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக காமராஜபுரத்தை சேர்ந்த சாந்தன் மகன் ராஜேஷ் என்பவரை போலீசார் மதுரையில் கைது செய்து, திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
குடும்பத்தினர் சாலைமறியல்
இந்நிலையில் ராஜேஷ் தாயார் புஷ்பா மற்றும் அவரது சகோதரர்கள் துரை, சுபாஷ், சகோதரிகள், குழந்தைகள், மனைவி ஆகியோர் நேற்று மாலை 3 மணியளவில் திடீரென்று ஆறுமுகநேரி பஜாரில் திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக ராஜேஷ் மதுரையில் தங்கிதொழில் செய்து வருவதாகவும், அவர் மீது ஆறுமுகநேரி போலீசார் பொய் வழக்கு போட்டு கைது செய்து உள்ளதாகவும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ராஜேஷ் குடும்பத்தை சேர்ந்த 15 பேர் கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இது அறிந்து ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. ஆனால் ராஜேஷை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு சாலைமறியலில் ஈடுபட்டிருந்த அனைவரையும் போலீசார் அப்புறப்படுத்தினர்.
இதை தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.