விபத்தில் இறந்த நாய்க்கு பேனர் வைத்து அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர்
மயிலாடுதுறை அருகே விபத்தில் இறந்த நாய்க்கு பேனர் வைத்து குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
மயிலாடுதுறை அருகே விபத்தில் இறந்த நாய்க்கு பேனர் வைத்து குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
செல்லமாக வளர்க்கப்பட்ட நாய்
மயிலாடுதுறை அருகே மூவலூர் மகாதானபுரத்தை சேர்ந்தவர் ஹரிபாஸ்கர். இவருடைய மனைவி கார்குழலி. இவர்கள் இருவருமே போலீஸ் துறையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நாய்கள் மீது மிகுந்த பிரியம் கொண்ட இந்த தம்பதியினர் தங்களது வீட்டில் 4 நாய்களை வளர்த்து வந்தனர்.இதில் குறிப்பாக சச்சின் என்ற நாயை மிகுந்த செல்லமாக வளர்ந்து வந்தனர். இந்த நாய் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு குரைத்து தனது எஜமானர்களை எழுப்பி விடும். ஹரிபாஸ்கர் குடும்பத்தினருக்கு மட்டுமின்றி அண்டை வீட்டாருக்கும் சச்சின் செல்லப் பிள்ளையாக இருந்து வந்தது.
மோட்டார் சைக்கிள் மோதி இறந்தது
இந்த நாய் தினமும் வீட்டின் அருகில் உள்ள வாய்க்காலில் குளித்து விட்டு சாலையை கடந்து வீட்டுக்கு வரும். வழக்கம்போல் நேற்று முன்தினம் வாய்க்காலுக்கு சென்று குளித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பியது.அப்போது சாலையைக் கடக்க முயன்ற நாய் மீது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அந்த நாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
குடும்பத்தினர் அஞ்சலி
தங்கள் குடும்பத்தில் ஒருவரைப்போன்று செல்லமாக வளர்ந்த நாய் விபத்தில் இறந்ததால் ஹரிபாஸ்கர் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். அவர்கள் இறந்த தங்களது செல்ல நாய்க்கு இரங்கல் பேனர் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் நாயின் உடலை அடக்கம் செய்தனர்.அப்போது ஹரிபாஸ்கர் கூறுகையில், தாங்கள் செல்லமாக வளர்த்த நாயை புதைத்த இடத்தில் தங்களது குழந்தைகளின் விருப்பப்படி கல்லறை அமைக்கப்படும் என்றார்.