கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்களை மாலையாக அணிந்து வந்த விவசாயி
பொது வழி பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு விவசாயி மனுக்களை மாலையாக அணிந்து வந்தார்.
பொது வழி பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு விவசாயி மனுக்களை மாலையாக அணிந்து வந்தார்.
பொதுவழி பாதை ஆக்கிரமிப்பு
சேத்துப்பட்டு தாலுகா நாராயணமங்கலம் கின்னனூர் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன், விவசாயி. இவர் பொதுவழி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனுக்களை மாலையாக அணிந்தபடி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் கோரிக்கை மனு அளிக்க வந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கின்னனூர் கிராம எல்லைக்கு உட்பட்ட தாங்கள் குளத்தின் குளக்கரை மீது பொது வழி பாதை முன்னாள் கலெக்டர் கந்தசாமியால் ஏற்படுத்தப்பட்டது. எங்கள் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளது. என்னுடைய விவசாயத்திற்கு தேவையான வண்டி வாகனங்கள், விவசாய இடு பொருட்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவை கடந்து செல்வதற்கு இந்த ஒரு வழி மட்டுமே உள்ளது. ஆனால் அந்த பாதையை சிலர் அவர்களுடைய விவசாய நிலத்தோடு ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இதனால் என்னுடைய நிலத்தில் நெற்பயிர் விளைச்சல் விளைந்திருந்து அறுவடை செய்ய முடியாமல் எங்களுடைய பயிர்கள் அனைத்தும் வீணாகின்றன.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் 3 முறை மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை. எனவே இந்த மனு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.