15 நெல் மூட்டைகளை காணவில்லை என கலெக்டரிடம் விவசாயி புகார்
குந்தபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்த 15 நெல் மூட்டைகளை காணவில்லை என மாவட்ட கலெக்டரிடம் விவசாயி புகார் அளித்தார்.
கலெக்டரிடம் புகார்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார். இதில், குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை என்கிற விவசாயி அளித்த மனுவில், தனது வயலில் அறுவடை செய்யப்பட்ட சுமார் 50 நெல் மூட்டைகளை குந்தபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக 27 நாட்களுக்கு முன்னர் அடுக்கி வைத்திருந்தேன்.
3 நாட்களுக்கு பிறகு சென்று பார்த்த போது 50 நெல் மூட்டைகளில் 15 நெல் மூட்டைகளை காணவில்லை. இது குறித்து நெல் கொள்முதல் நிலைய அதிகாரி மற்றும் இரவு காவலரிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்காமல் என்னை தாக்கினார். இதனால் மன உளைச்சலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இது போல் நெல் கொள்முதல் நிலையங்களில் திருட்டு சம்பவம் அதிகமாக உள்ளது. எனவே நெல் கொள்முதல் நிலைய அதிகாரி மற்றும் இரவு காவலர் மீது நடவடிக்கை எடுத்து காணாமல் போன 15 நெல் மூட்டைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
குடிநீர் இன்றி அவதி
பூண்டி ஊராட்சி கோக்குடி மேலத் தெருவை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், எங்களுக்கு கடந்த 4 மாதங்களாக சரியான குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். இதுகுறித்து எங்களின் ஊராட்சி மன்ற தலைவரை அணுகி முறையிட்டும் சரியாக பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தி வருவதுடன் சரியான நடவடிக்கை மேற்கொள்ளாமல் வருவதால் வாரம் ஒரு முறை கூட குடிநீர் வருவதற்கு வழி செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறார். நாங்கள் குடிநீர் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
265 மனுக்கள்
செந்துறை அம்பேத்கர் நகரை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில், நாங்கள் 20 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். நாங்கள் அன்றாடம் கூலி வேலை செய்தால் மட்டுமே எங்களது வாழ்வை நடத்த முடியும். இந்த சூழ்நிலையில் வாடகைக்கு என்று ஒரு தொகை செலவிடுவதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. எனவே எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதுபோல் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 265 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டரால் பெறப்பட்டு இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.