விஷம் குடித்து போலீஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த விவசாயி
காவேரிப்பாக்கத்தில் நிலப்பிரச்சினை காரணமாக விஷம் குடித்த விவசாயி போலீஸ் நிலையத்தில் மயங்கி விழுந்தார்.
காவேரிப்பாக்கத்தில் நிலப்பிரச்சினை காரணமாக விஷம் குடித்த விவசாயி போலீஸ் நிலையத்தில் மயங்கி விழுந்தார்.
மயங்கி விழுந்த விவசாயி
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் கவரைத் தெருவை சேர்ந்தவர் விஜயின் (வயது 54) விவசாயி. பேரூராட்சி முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர். இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணமாகி தனித் தனியே வசித்து வருகின்றனர். நிலம் சம்மந்தமாக குடும்பத்தில் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று பிற்பகல் விஜயன் விஷம் குடித்துள்ளார். பின்னர் விஷப்பாட்டிலுடன் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது திடீரென போலீஸ் நிலையம் முன்பு கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த போலீசார் தூக்கி விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் விஷம் குடித்திருப்பது தெரிய வந்தது.
மருத்துவமனையில் அனுமதி
உடனடியாக அவரை மீட்டு 108-ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் மற்றும் அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் ஆகியோர் நேற்று மாலை காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு சென்று விசாரணை செய்தனர். மேலும் போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிளை ஆய்வு செய்தனர்.
புகார் அளிக்கலாம்
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் கூறுகையில் பொது மக்களின் உயிர் விலை மதிப்பற்றது. இது போன்ற தவறான முடிவு மேற்கொள்வதால் மட்டும் தீர்வு கிடைக்காது. தங்கள் குறைகளை எங்களிடம் தெரிவித்தால் நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம். பொது மக்கள் தைரியமாக தங்கள் பிரச்சினை குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம். புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், என்னிடம் வந்து புகார் அளிக்கலாம்.
புகார் அளிக்க வருபவர்களை அன்போடு வரவேற்று, அவர்கள் அளிக்கும் மனு மீது விசாரணை நடத்தி தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். மேலும் மாவட்டத்தில் இருந்து இதுவரை என்னிடம் 1700-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் வந்தன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே பொது மக்கள் தயங்காமல் என்னிடம் வந்து புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.