கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தக்கோரி தாசில்தார் காலில் விழுந்த விவசாயி
நாட்டறம்பள்ளியில் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தக்கோரி தாசில்தார் காலில் விழுந்த விவசாயியால் பரபரப்பு.
நாட்டறம்பள்ளியை அடுத்த தெக்குப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முனிசாமி. இவரது மகன் சிவசக்திவேல் (வயது 39) விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் கேத்தாண்டப்பட்டி அருகே உள்ள பாம்பாட்டி வட்டத்தில் உள்ளது. இந்த நிலத்திற்கு பாதை இருந்து வந்தது. அந்தவழியாக செல்லும் போது பக்கத்து நிலத்தின் உரிமையாளருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் சிவசக்திவேல் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நிலத்தை அளக்க மனு கொடுத்தார். சம்மந்தப்பட்ட இடத்தை அளக்க சர்வேயர் செல்லும் போது தகராறு செய்து திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதனால் சிவசக்திவேல் சென்னை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் சிவசக்திவேல் நிலத்தை உடனடியாக அளந்து கொடுக்கும் படியும், 8 வார காலத்திற்குள் பாதை ஆக்கிரமிப்பை அகற்றவும் கோர்ட்டு உத்தரவு வழங்கியது.
கோர்ட்டு தீர்ப்பை உடனடியாக நிறைவேற்றக் கோரி நேற்று சிவசக்திவேல் நாட்டறம்பள்ளி தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு தாசில்தார் காலில் விழுந்து கோர்ட்டு உத்தரவை உடனடியாக நிறைவேற்ற கோரிக்கை விடுத்தார். உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அங்கிருந்து சென்றார். இதனால் தாசில்தார் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.