சிறையில் இருந்து வந்த விவசாயி தூக்குப்போட்டு சாவு-கள்ளக்காதலுக்கு குடும்பமே அழிந்தது


சிறையில் இருந்து வந்த விவசாயி தூக்குப்போட்டு சாவு-கள்ளக்காதலுக்கு குடும்பமே அழிந்தது
x

ஓமலூர் அருகே மனைவி, குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வந்த விவசாயி தூக்குப்போட்டு உயிரை விட்டார். கள்ளக்காதலால் குடும்பமே அழிந்த இந்த விபரீதம் நடந்துள்ளது.

சேலம்

ஓமலூர்:

கள்ளக்காதல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கணவாய் புதூர் ஊராட்சி கே.மோரூர் லேண்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 32). விவசாயி. இவருக்கும், தர்மபுரி மாவட்டம் எக்கன்டஹள்ளி பகுதியை சேர்ந்த மரகதம் (30) என்பவருக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு செல்வகணபதி (7), கோகுலக்கண்ணன் (5) என்ற 2 மகன்கள் இருந்தனர்.

பிரபாகரனுக்கு சொந்தமாக விவசாய நிலங்கள் உள்ளன. மேலும் அவர் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துவந்து அதனை உருக்கி சிறு உருண்டையாக மாற்றி வெளியூர்களுக்கு பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் பிரபாகரனுக்கும், அவரது நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

தற்கொலை

இது குறித்து மரகதம் பலமுறை தனது கணவர் பிரபாகரனிடம் கள்ளக்காதலை கைவிடுமாறு கேட்டும், அவர் கைவிடாததால் கடந்த பிப்ரவரி மாதம் மரகதம், தனது மகன்கள் செல்வகணபதி, கோகுல கண்ணன் ஆகியோருடன் அவர்களது விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் பிரபாகரன் மற்றும் அவரது கள்ளக்காதலி சீதா ஆகியோரை கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர்.

இந்த நிலையில் சிறையில் இருந்த பிரபாகரன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பின்னர் மனைவி மற்றும் குழந்தைகள் இறந்த சோகத்தில் பிரபாகரன் இருந்துள்ளனர். மேலும் உறவினர்களும் அவருடன் சரிவர யாரும் பேசுவதில்லை என தெரிகிறது.

தூக்குப்போட்டார்

இந்த நிலையில் நேற்று அதிகாலை பிரபாகரன் செம்மாண்டப்பட்டி அருகே உள்ள அவர்களது குலதெய்வ கோவிலான அண்ணமார் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். பின்னர் கோவில் வளாகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் வடிவேலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரபாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்கனவே மனைவி மற்றும் குழந்தைகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கணவனும் நேற்று தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்காதலுக்கு குடும்பமே அழிந்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story