வேடசந்தூர் அருகே விவசாயியை வழிமறித்து கொன்ற வழக்கில் 7 பேர் கும்பல் சிக்கியது


வேடசந்தூர் அருகே விவசாயியை வழிமறித்து கொன்ற வழக்கில் 7 பேர் கும்பல் சிக்கியது
x
தினத்தந்தி 24 Jun 2023 2:30 AM IST (Updated: 24 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே விவசாயியை வழிமறித்து கொன்ற வழக்கில் 7 பேர் கும்பல் சிக்கியது.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே விவசாயியை வழிமறித்து அடித்துக்கொன்ற வழக்கில் 7 பேர் கும்பல் சிக்கியது.

வாய்த்தகராறு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த உண்டார்பட்டி அருகே உள்ள பிறகரை ஸ்டெல்லா நகரை சேர்ந்தவர் எட்வின் ஜோசுவா (வயது 28). விவசாயி. இவருக்கு கிருஷ்டி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கிருஷ்டியின் தாய் மேரி (வயது 50). இவர் திண்டுக்கல் முத்தழகுபட்டியில் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மேரியிடம் ஒரு கும்பல் தகராறு செய்தது. அப்போது அவர் வசிக்கும் வீடு, புறம்போக்கு இடத்தில் உள்ளதாகவும், அதனால் தங்களுக்கு பணம் தர வேண்டும் என்று கூறி மிரட்டியதுடன், அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றது.

இதுகுறித்து மேரி, தனது மருமகன் எட்வின் ஜோசுவாவிடம் கூறினார். இதையடுத்து அவர், அந்த கும்பலை தொடர்பு கொண்டு தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து சில நாட்களாக அந்த கும்பலை சேர்ந்த நபர்களை எட்வின் ஜோசுவா செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வாக்குவாதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அடித்துக்கொலை

இந்தநிலையில் கடந்த 20-ந்தேதி இரவு எட்வின் ஜோசுவா தாடிக்கொம்பில் இருந்து உண்டார்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனை அறிந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அவரை வழிமறித்து ஆட்டோவில் கடத்தி சென்றனர். உண்டார்பட்டி அருகே சந்தன வர்த்தினி ஆற்றுப்பாலம் அருகே அவரை கொண்டு சென்று உருட்டுக்கட்டையால் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிஓடிவிட்டது. இதில் படுகாயம் அடைந்த எட்வின் ஜோசுவா உயிருக்கு போராடினார். இதற்கிடையே அந்த வழியாக வந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி, இன்ஸ்பெக்டர் ஜெயராணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து எட்வின் ஜோசுவாவை கொன்ற கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

7 பேர் கைது

இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், எட்வின் ஜோசுவாவை கொலை செய்த கும்பலை சேர்ந்தவர்கள், திண்டுக்கல் முத்தழகுப்பட்டி கிழக்குத்தெருவை சேர்ந்த அலெக்ஸ்ராஜ் (வயது 25), எடிசன்ராஜ் (24), ரிச்சர்ட் சச்சின் (25), அமல்ராஜ் (55), முருகபவனத்தை சேர்ந்த பொன் அர்ஜூன் (22), மாரம்பாடி பெரியகுளத்துப்பட்டியை சேர்ந்த ஜான்சன் (24), திண்டுக்கல் லயன்தெருவை சேர்ந்த அரவிந்தன் (26) என்பது தெரியவந்தது. இவர்கள் 7 பேரும் மாரம்பாடி அருகே உள்ள ஒரு குளத்தில் பதுங்கியிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் 7 பேரும் மாரம்பாடி பஸ் நிறுத்தத்துக்கு சென்று பஸ்சில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது அங்கு வந்த தனிப்படை போலீசார், அவர்கள் 7 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, திண்டுக்கல் சிறையில் 7 பேரும் அடைக்கப்பட்டனர்.


Next Story