விவசாயி தலை துண்டித்து கொடூரக் கொலை
தா.பேட்டை அருகே மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் விவசாயியின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்து வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
தா.பேட்டை அருகே மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் விவசாயியின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்து வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
விவசாயி
திருச்சி மாவட்டம், தா.பேட்டையை அடுத்த கொழிஞ்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 66). விவசாயியான இவருக்கு திருமணமாகி மணிமேகலை என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இதே கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை (52). ஆடு, மாடுகள் மேய்த்து வருகிறார். இவருக்கு செல்லபாப்பு என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். செல்லதுரை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதன் காரணமாக அவர் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கொடூரக் கொலை
நேற்று மாலை துரைராஜ் வயலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த செல்லதுரை அந்த வழியாக நடந்து வந்த துரைராஜை திடீரென பிடித்து கீழே தள்ளி உள்ளார்.இதில் நிலை தடுமாறிய துரைராஜ் கீழே விழுந்தார். இதனையடுத்து செல்லதுரை அரிவாளை எடுத்து வந்து துரைராஜின் கழுத்து, தலை, முகம் பகுதியில் பலமுறை கொடூரமாக வெட்டினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் துரைராஜ் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். துரைராஜின் தலையை துண்டித்து பல துண்டுகளாக வெட்டியதில் அப்பகுதி முழுவதும் மூளை, மண்டை ஓடு சிதறி கிடந்தது.
அதே நேரத்தில் செல்லதுரை உடல் முழுவதும் ரத்தத்துடன் துரைராஜியின் சடலத்தின் அருகிலேயே படுத்து கிடந்தார். இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் வசிப்பவர்கள் தா.பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
அதன் பேரில் முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின் தலைமையில், தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்லதுரையை பிடித்தனர். துரைராஜின் தலையை பல துண்டுகளாக வெட்டிய போது செல்லதுரையின் விரல்களும் துண்டிக்கப்பட்டு படுகாயம் ஏற்பட்டு இருந்தது. இதனையடுத்து காயம் அடைந்த அவரை துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயி தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.