காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம்
சூளகிரி அருகே காட்டு யானை தாக்கி, விவசாயி படுகாயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சூளகிரி:
சூளகிரி அருகே காட்டு யானை தாக்கி, விவசாயி படுகாயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
யானைகள் முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 3 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள், இரவு நேரங்களில் காட்டை விட்டு வெளியேறி, அருகிலுள்ள கிராமப்பகுதிகளில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வந்தன.
இதனால் சானமாவு மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். மேலும் அந்த காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சூளகிரி அருகே கரகூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னசாமி (வயது50) நேற்று காலை அப்பகுதியில் உள்ள தனதுவிவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது, புதர் மறைவில் பதுங்கியிருந்த ஒரு காட்டு யானை, திடீரென சின்னசாமியை தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து கூச்சல் போட்டு யானையை அங்கிருந்து விரட்டினர்.
வனத்துறையினர் அறிவுறுத்தல்
பின்னர் அவர்கள் யானை தாக்கி படுகாயமடைந்த சின்னசாமியை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சானமாவு காட்டில் பதுங்கியுள்ள 3 காட்டு யானைகளும் அடிக்கடி தனியாக பிரிந்து சானமாவு, பீர்ஜேபள்ளி, நாயக்கனபள்ளி, ராமாபுரம், ஆலியாளம், போடூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புகுந்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தினர். மேலும் யானைகளின் நடமாட்டம் குறித்து அவர்கள் கண்காணித்து வருகின்றனர்.