ஆயக்குடியில் காட்டெருமை முட்டி விவசாயி படுகாயம்
ஆயக்குடியில் காட்டெருமை முட்டி விவசாயி படுகாயம் அடைந்தார்.
பழனியை அடுத்த பழைய ஆயக்குடியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 65). விவசாயி. இவருக்கு ஆயக்குடி சட்டப்பாறை பகுதியில் மாந்தோப்பு உள்ளது. நேற்று அவர் மாந்தோப்பை பார்வையிட சென்றபோது, திடீரென காட்டெருமை ஒன்று தோப்புக்குள் வந்தது. இதைக்கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் அதற்குள் அந்த காட்டெருமை அவரை முட்டி தள்ளியது. இதில் அவரின் தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
சத்தம் கேட்டு அருகே உள்ள தோட்ட விவசாயிகள் விரைந்து வந்து கனகராஜை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக பழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையே ஒட்டன்சத்திரம் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனக்காப்பாளர் ரமேஷ்பாபு தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.