விவசாயி சரமாரி வெட்டிக்கொலை
புளியங்குடி அருகே, இரவில் தோட்டத்தில் புகுந்து விவசாயியை மர்மநபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
புளியங்குடி:
புளியங்குடி அருகே, இரவில் தோட்டத்தில் புகுந்து விவசாயியை மர்மநபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விவசாயி
தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி அம்பேத்கர் முதல் தெருவை சேர்ந்த பிச்சையா மகன் மைதுகனி (வயது 46).
இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், முருகேசன், சக்திவேல் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் முருகேசனுக்கு திருமணமாகி விட்டது. 2-வது மகன் சக்திவேல் (22) படித்து முடித்து விட்டு உள்ளூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
மைதுகனி, கடந்த 7 ஆண்டுகளாக கோட்டமலை பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். தற்போது அந்த நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார்.
வெட்டிக்கொலை
நேற்று முன்தினம் இரவு மைதுகனி, வயல் வேலைகளுக்காக தோட்டத்தில் தங்கியிருந்தார். அப்போது அருகில் உள்ள மற்றொரு தோட்டத்தின் உரிமையாளர் கண்ணன் என்பவரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். மைதுகனி, செல்போனில் பேசிக் கொண்டிருக்கும்போது நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. திடீரென செல்போன் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இதனால் சந்தேகம் அடைந்த கண்ணன், இதுகுறித்து மைதுகனியின் குடும்பத்தினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து மைதுகனியின் மகன் சக்திவேல், அவரது நண்பர் ஆகியோர் நள்ளிரவில் வயலுக்கு சென்று மைதுகனியை தேடினர். அப்போது மைதுகனி, உடலில் வெட்டுக்காயங்களுடன் வயல் பகுதியில் பிணமாக கிடந்தார். மர்ம நபர்கள், நள்ளிரவில் தோட்டத்தில் புகுந்து மைதுகனியை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது.
நிலப்பிரச்சினையா?
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மைதுகனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
நிலப்பிரச்சினையில் மைதுகனி கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பியோடிய கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நள்ளிரவில் விவசாயி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் புளியங்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.