தாயை பிரிந்து தவித்த புள்ளிமான் குட்டியை வனத்துறையினரிடம் ஒப்படைத்த விவிசாயி
விளாத்திகுளம் அருகே தாயை பிரிந்து தவித்த புள்ளிமான் குட்டியை விவசாயி ஒருவர் மீட்டு பாதுகாப்பாக வனத்துறையிடம் ஒப்படைத்தார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே தாயை பிரிந்து தவித்த புள்ளிமான் குட்டியை விவசாயி ஒருவர் மீட்டு பாதுகாப்பாக வனத்துறையிடம் ஒப்படைத்தார்.
தாயை பிரிந்த மான்குட்டி
விளாத்திகுளம் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். விவசாயி. இவர் நேற்று காலையில் வழக்கம்போல் தனது தோட்டத்திற்கு பருத்தி எடுப்பதற்காக சென்றார்.
அப்போது அவரது தோட்டத்திற்குள் 15 நாள் மதிக்கத்தக்க பெண் புள்ளிமான்குட்டி ஒன்று வனத்திலிருந்து தாயைப் பிரிந்து பரிதவித்து நின்றது. இதை பார்த்த ரமேஷ் பாதுகாப்பாக பிடித்தார். அந்த மான்குட்டியை செல்போனில் புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில், இங்கு ஒரு புள்ளிமான் குட்டி தாயை பிரிந்து தவித்து இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அந்த மான் குட்டியை பாதுகாப்பாக பராமரித்து வந்தார்.
வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
இதை அறிந்த விளாத்திகுளம் வனச்சரக அலுவலர்கள் புளியங்குளத்திற்கு சென்றனர். அவர்களிடம் புள்ளிமான் குட்டியை வனச்சரக அலுவலர்களிடம் ரமேஷ் ஒப்படைத்தார். அந்த குட்டியை பெற்றுக் கொண்ட அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு குருமலை காப்புக் காட்டில் பத்திரமாக விடப்பட்டனர்.
தாயைப் பிரிந்து பரிதவித்த புள்ளிமான் குட்டியை பாதுகாப்பாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்து, தாயுடன் சேர முயற்சி எடுத்த விவசாயியை பொதுமக்களும், வனத்துறையினரும் பாராட்டினர்.