கால்வாய்கள் தூர்வாரப்படாததை கண்டித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் திடீர் போராட்டம்; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


கால்வாய்கள் தூர்வாரப்படாததை கண்டித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் திடீர் போராட்டம்; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

அணை திறக்கப்பட்டு 15 நாட்களாகியும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா மற்றும் அரசு அதிகாரிகள், விவசாய பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் பேசினர். அதன் விவரம் வருமாறு:-

கடைமடைக்கு தண்ணீர் செல்லாத நிலை

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக ஜூன் 1-ந் தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. அணை திறக்கப்பட்டு 15 நாட்களாகியும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. ஏற்கனவே கால்வாய்களை தூர்வார வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை. எனவே உடனடியாக கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பயிர்கள் கருகும் நிலை ஏற்படும்.

மேலும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழையாற்றின் கரையில் உள்ள மரங்கள் அதிகளவு வெட்டப்பட்டுள்ளது. வள்ளியாற்றில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் விளை நிலங்கள் மனைகளாக மாற்றப்பட்டு வருகி றது. அனுமதி பெறாமல் பல்வேறு இடங்களில் மனைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மானிய விலையில் நடவு எந்திரம்

கன்னிப்பூ சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. நடவு பணியில் பெண்கள் தான் அதிக அளவில் ஈடுபடுவார்கள். ஆனால் தற்போது ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நேரடி விவசாயம் செய்வதால் மகசூல் குறையும். எனவே நடவு எந்திரம் மூலமாக நடவு பணி மேற்கொள்வதற்கு நடவு எந்திரம் மானிய விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவு எந்திரம் மூலமாக நடவு செய்யும் போது மகசூல் அதிக அளவு கிடைக்கும். தென்னை மரங்களில் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மகசூல் குறைந்துள்ளது. தேங்காய் விலையும் குறைவாக உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு தென்னை மரத்தில் தேங்காய் வெட்டுவதற்கு ரூ.30 முதல் ரூ.50 வரை கொடுக்க வேண்டியது உள்ளது. ஆனால் அந்த அளவிற்கு தேங்காய் உற்பத்தி இல்லை. தற்போது பனை மரத்திற்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. எனவே பனை மரத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தூர்வார நடவடிக்கை

இதனை தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் பேசுகையில் கூறியதாவது:-

குமரி மாவட்டம் முழுவதும் கால்வாய்களை தூர்வாருவதற்கு ரூ.5 கோடியே 24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து கால்வாய்களும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். நாளை 16-ந் தேதி (அதாவது இன்று) திருவிதாங்கோடு, இரணியல், சேரமங்கலம், முட்டம், ஆசாரிபள்ளம், அத்திக்கடை, சம்பகுளம், கோட்டையடி ஆகிய கால்வாய்கள் தூர்வாரப்படும். 19-ந் தேதி பட்டணங்கால்வாய், குளச்சல், கப்பியறை, மிடாலம், தேங்காப்பட்டணம், தேவிக்கோடு பகுதியில் உள்ள கால்வாய்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது பிரதான கால்வாய்களில் தண்ணீர் சென்று கொண்டு இருப்பதால் படிப்படியாக தூர்வார நடவடிக்கை மேற்கொள்வோம். விவசாயிகள் பல்வேறு இடங்களில் சாகுபடி பணி மேற்கொண்டு உள்ளதால் விவசாயிகளிடம் கருத்து கேட்ட பிறகு பிரதான கால்வாய்களில் தண்ணீரை அடைத்து தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகளுக்கு தேவையான நடவு எந்திரம் மானிய விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகள் திடீர் போராட்டம்

முன்னதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

ஆனால் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு செல்லாமல் திடீரென விவசாயிகள் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மாவட்டத்தில் உள்ள கால்வாய்களை தூர்வார வேண்டும், இதனை செய்ய தவறிய அதிகாரிகளை கண்டிக்கிறோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடங்கள் அங்கேயே இருந்தபடி விவசாயிகள் கோஷங்களை எழுப்பிக் கொண்ட இருந்தனர். அதன்பிறகு தான் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று தங்களுடைய கோரிக்கையை பதிவு செய்தனர்.


Next Story